வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (08:18 IST)

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற தாய், 6 குழந்தைகளை இழந்த சோகம்!

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் வரும் தகவல்கள் உங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கக்கூடும்.
 
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்ற நிலையில், அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு குழந்தை செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டுள்ளது.
 
எண்ணிக்கை அதிகம் என்பதால், கருவுக்குள் இருந்த குழந்தைகளுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் இந்த மரணங்கள் நிகழ்ந்தன என்று மருத்துவர் தெரிவிக்கிறார்.
 
கடந்த வாரம், அப்போட்டாபாத்திலுள்ள ஜின்னா இண்டர்நேஷ்னல் மருத்துவமனையில், பெண் ஒருவர் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். அவற்றில், ஐந்து குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு குழந்தை அங்குள்ள அயூப் டீச்சிங் மருத்துவமனையின் சில்ரன் நர்சரி வார்ட்டில் உயிரிழந்துள்ளது.
 
இதுகுறித்து, குழந்தைகளின் தந்தை காரி யர் முகமது கூறுகையில், ஒரு குழந்தை பிறந்து 24 மணி நேரம் கழித்து இறந்தது; சில மணி நேரங்களில் மற்றொரு குழந்தை இறந்தது. அன்றைய இரவு மேலும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தன என்று தெரிவித்தார்.
காரி யர் முகமது பட்டகிராம் மாவட்டத்தில் வசிக்கிறார். அவரின் மனைவி ஜின்னா இண்டர்நேஷனல் டீச்சிங் மருத்துவமனையில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏழு குழந்தைகள் பிறந்ததில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
 
யர் முகமது கூறுகையில், "இரண்டு குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர் என்று எங்களுக்கு தெரிந்தவுடன், நாங்கள் இஸ்லாமாபாத்திலுள்ள பி.ஐ.எம்.எஸ் மருத்துவமனைக்கு செல்லத் தயாராக இருந்தோம். ஆனால், அதன் பின்னரே, எங்களின் குழந்தைகள் அப்போட்டாபாத்திலுள்ள அயூப் டீச்சிங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று எங்களுக்கு கூறப்பட்டது. இங்கும் ஒரு குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. மற்றொரு குழந்தையும் வெண்டிலெட்டரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை பிறந்ததிலிருந்து இதில் வைக்கப்பட்டுள்ளது," என்றார்.
 
குழந்தைகளின் தாய்க்கு இரண்டு குழந்தைகள் மட்டும் உயிரிழந்தன என்று தெரியும் எனவும், முழு விவரம் தெரியாது என்றும் அவர் கூறுகிறார்.
 
ஜின்னா இண்டர்நேஷனல் மருத்துவமனையும் அயூப் டீச்சிங் மருத்துவமனையும் குழந்தைகளின் இறப்பை உறுதி செய்துள்ளனர். அயூப் டீச்சிங் மருத்துவமனை தரப்பினர் பிபிசிடம் பேசுகையில், அக்குழந்தைகள் உரிய கர்ப்ப காலத்திற்கு முன்னரே (Pre-mature) பிறந்த குழந்தைகள் என்றும், அவர்களின் எடை மிகவும் குறைவாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
 
மருத்துவமனையில் உள்ள நர்சரி வார்ட்டின் சிறப்பு மருத்துவர் இக்ராம், பொதுவாக ஒரு அல்லது இரண்டு குழந்தைகளுடன் கர்ப்பம் தரிப்பார்கள். அவர்களுக்கு தாயின் கருவில் இருக்கும்போது எல்லா ஊட்டச்சத்தும் கிடைக்கும். ஆனால், இவர்களின் விஷயத்தில் நிறையக் குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு முழு ஊட்டச்சத்தும் கிடைக்கவில்லை. அத்தகைய நிலையில், அவர்களுக்கு ஆபத்து அதிகமானது என்று தெரிவித்தார்.