1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (15:02 IST)

கோவை அருகே 2 மாதங்களில் 9 யானைகளின் உயிரிழப்பு - காரணம் என்ன?

கோவை அருகே கடந்த இரண்டு மாதங்களில் யானைகளின் உயிரிழப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் டாப் ஸ்லிப் பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. 

06.02.2022 அன்று 30 வயது பெண் யானை ஒன்று காரமடை வனச்சரகம் மானார் பிரிவுக்கு உட்பட்ட பரளிக்காடு பழங்குடியினர் கிராமம் அருகில் இறந்தது.
 
07.02.2022 அன்று தடாகம் பிரிவு, தடாகம் தெற்கு சுற்றுக்கு அருகில் பெரியதடாகம் கிராமத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் கண்டறியப்பது. யானைக்கு இரு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தது.
 
12-02-2022 அன்று துடியலூர் பிரிவு தடாகம் வடக்கு சுற்று எல்லைக்குட்பட்ட வரப்பாளையம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் ஆண் யானை தும்பிக்கை பகுதியில் வேலி கம்பி தொடர்பில் வந்து உயிரிழந்திருந்தது.
 
15.03.2022 அன்று நரசிபுரம் பிரிவு அருகே இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் எலும்பு சிதறல்கள் கண்டறியப்பட்டன. இறந்தது ஏழு வயதான பெண் யானை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
 
17.3.2022 அன்று தடாகம் தெற்கு சுற்றுப் பகுதியில் சலீம் அலி சராக வனப்பகுதியில் ஒரு ஆண் யானை உயிரிழந்தது.
 
22.03.2022 அன்று போலுவம்பட்டி வனச்சரகத்தில் தாடையில் காயம் ஏற்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அவுட்டுக்காய் என்று அழைக்கப்படும் நாட்டு வெடியை கடித்ததால் யானை உயிரிழந்ததாக பின்னர் தெரியவந்தது.
 
29.03.2022 அன்று சிறுமுகை வனச்சரகத்துக்கு அருகே உள்ள பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதியில் ஆறு வயது பெண் யானை ஒன்று உயிரிழந்திருந்தது.
 
31.3.22 அன்று சிறுமுகை வனச்சரகம், மூலையூர் சராக வனப்பகுதியில் வயது வந்த பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.
 
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் உயிரிழந்த யானைகள், குறிப்பாக இளம் யானைகள் உயிரிழப்பு பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஒரு குழுவை அமைத்துள்ளார்.
 
இந்தக் குழு இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்த இடத்திற்கு சென்று இறப்புக்கான காரணங்களை ஆராய்ந்து, உள்ளூர் மக்களுடன் கலந்தாலோசித்து யானை இறப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இது போன்ற சம்பவங்களை திறம்பட கண்கானித்து எதிர்காலத்தில் இவை நிகழாமல் குறைப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
 
மனித மோதலால் நிகழ்ந்தவை எத்தனை?
 
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஓசை அமைப்பைச் சேர்ந்த வன ஆர்வலர் காளிதாஸ், `கோவை பகுதியில் இறந்துள்ள 9 யானைகளில் இரண்டு யானைகள்தான் மனிதர்கள் தலையிட்டதால் உயிரிழந்துள்ளன. ஒரு யானை மின்வேலியில் அடிபட்டும் மற்றொரு யானை அவுட்டுக்காய் என்கிற வெடியால் ஏற்பட்ட விபத்திலும் உயிரிழந்துள்ளன. மற்றவை இயற்கை காரணங்களால் உயிரிழந்துள்ளன.
 
யானைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக அளவில் இறக்கவில்லை. கோடை காலங்களில் இது போன்ற மரணங்கள் ஏற்படுவது இயல்புதான். இதற்காக பதற்றமடைய தேவையில்லை. அதே சமயம் யானைகளின் இறப்பு கவனமாக கையாளப்பட வேண்டும். வயதான, உடல்நலமில்லாத யானைகள் இயற்கை மரணம் அடைவது இயல்புதான். இளம் வயது யானைகள் அதிக அளவில் உயிரிழந்தால் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும்.
 
இந்த யானைகள் அனைத்தும் கோவையைச் சேர்ந்தவை என வரையறுத்து கூறிவிட முடியாது. யானைகள் பருவ நிலைக்கு ஏற்ப முதுமலை, கோவை, சத்தியமங்கலம் என இடம்பெயர்ந்து செல்லும். யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கும். யானை மக்கள் தொகையை வைத்து தான் இதன் தீவிரத்தை ஆராய முடியும்.
 
கணக்கெடுப்பு நடத்தவேண்டும்..
 
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதே போல் பகுதி வாரியாக வருடம் ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. அதை நடத்த வேண்டும். யானைகள் எண்ணிக்கை எவ்வளவு, அதில் இளம் வயது யானைகள் எந்த அளவில் உள்ளன என்பது போன்ற தரவுகள் எடுக்கப்பட வேண்டும்` என்றார்.
 
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன், `யானை இறப்பு செய்திகளை பூதாகரமாகி பார்க்கக்கூடாது. இறந்த 9 யானைகளில் இரண்டு யானைகள் மட்டுமே இயற்கை அல்லாத காரணங்களால் இறந்துள்ளது. அந்த இரண்டு சம்பவங்களிலும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்வேலிகளை கண்கானிப்பதற்கான பணிகளும் நடைபெறுகின்றன.
 
வயதான யானைகள் உடல்நலக் குறைவால் இறப்பது இயல்பான ஒன்று தான். அதே சமயம் இளம் வயது யானைகள் அதிக அளவில் இறந்தால் கவனத்துடன் பார்க்க வேண்டும். சமீப நாட்களில் நடைபெற்ற யானை மரணங்களில் பொதுவான காரணிகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு யானைகளில் இறப்பும் அதற்கான காரணங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை காரணங்களால் யானைகள் இறப்பதை வனத்துறையில் அசாதாரணமான சம்பவங்கள் நிகழ்வதாக சித்தரிக்கக்கூடாது.
 
ஆண்டுதோறும் எடுக்கப்படும் யானைகள் கணக்கெடுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் நிகழ்த்தப்படவில்லை. இந்த ஆண்டு கண்டிப்பாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இறப்பு பதிவு செய்யப்படுவதைப் போல பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. யானைகளின் எண்ணிக்கையோடுதான் இறப்பு எண்ணிக்கைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கோவையில் யானைகளின் எண்ணிக்கை அதிக அளவிலே உள்ளன. கணக்கெடுப்பிற்குப் பிறகு இவை முழுமையாக வெளிப்படும்` என்றார்.