ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (20:53 IST)

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு 6 மாதம்: இதுவரை நடந்தது என்ன?

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 மாதங்களாகின்றன.
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்கள் மீது ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
அத்துடன், கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பேரி, ஷங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின் 259 பேர் இறந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
 
சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தனர்.
 
விசாரணை இந்த தாக்குதல் சம்பவத்துடன் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு நேரடியாக தொடர்பு கொண்டிருப்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக சுமார் 293 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 178 சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 
சந்தேக நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
 
நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை
 
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
 
இந்த குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நியமிக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களாக அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
 
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை புறக்கணித்தது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முப்படை தளபதிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
 
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி ஒருவரிடம் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறை.
 
இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இலங்கையில் போலீஸ் மாஅதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
 
இதன்படி, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள பின்னணியில், தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை மறுதினம் (23) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
அவசர காலச் சட்டம்
 
இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
 
ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமல்படுத்தியிருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து 4 மாதங்கள் நாடாளுமன்றத்தில் நீடிக்கப்பட்ட அவசர காலச் சட்டம், நான்கு மாதங்களின் பின்னர் நீக்கப்பட்டது.
 
தேசிய தௌஹித் ஜமாத் உறுப்பினர்கள் கைது
 
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் சகல உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஜுன் மாதம் 23ஆம் தேதி அறிவித்தார்.
 
போலீஸார் மற்றும் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் பிரகாரம், அனைத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
சுற்றுலாத்துறை பாதிப்பு
 
இலங்கையின் சுற்றுலாத்துறை யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மிக வேகமாக வளர்ச்சி அடைந்திருந்தது.
 
கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டே இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் 2018ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர்.
 
எனினும், ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வீழ்ச்சி அடைந்தது.
 
வெளிநாட்டு சுற்றுலாத் துறையினருக்கு வழிகாட்டியாக செயற்படும் கொழும்புவை சேர்ந்த அருண் பாரதியிடம் பி.பி.சி தமிழ் வினவியது.
 
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்ட நாள் முதல் சுமார் மூன்று மாதங்கள் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
 
''சுற்றுலாத்துறையையே நாம் முழுமையாக நம்பி இருக்கின்றோம்;. வெளிநாட்டவர்கள் வந்தால் மாத்திரமே எமக்கு வருமானம். பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் வருமானம் முழுமையாக இல்லாது போனது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கூட சுற்றுலா செல்வதை தவிர்த்திருந்தார்கள். 90 சதவீத வருமானம் மூன்று மாதங்கள் இருக்கவில்லை. வாகனங்களுக்கான குத்தகையை கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜுலை மாதத்தின் பின்னர் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது" என அவர் கூறினார்.
 
ராஜகோபால் விவேகானந்தன்
 
ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தமது வருமானம் முழுமையாக பாதிக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை வழிகாட்டி ராஜகோபால் விவேகானந்தன் தெரிவிக்கின்றார்.
 
கடந்த ஜுலை மாதத்திற்கு பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் வழமைக்கு திரும்பிய போதிலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் தமது தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
நாட்டில் தேர்தல் ஒன்று நடக்கும் சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறையினரின் வருகை குறைவடையும் என்கிறார் அவர்.
 
இவ்வாறான நிலையில் இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, தற்போது இலங்கை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.