ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (12:25 IST)

ஏட்டில் 500, எதிரில் 230: சென்னை அருகே அரசுப் பள்ளியில் போலி மாணவர் சேர்க்கை மோசடி நடந்தது எப்படி?

school student

சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் போலி மாணவர்களைக் கணக்கு காட்டி வருகைப் பதிவேட்டில் மோசடி செய்ததாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

கோப்பு படம்
 

இட மாறுதலை தவிர்க்க மாணவர்கள் எண்ணிக்கையை முறைகேடாக அதிகரித்து காட்டியும் போலி ஆதார் எண்களைப் பயன்படுத்தியும் இந்த மோசடி நடந்திருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறுகிறார்.

 

அதிகாரிகள் மீதான தவறுகளை மறைக்க ஆசிரியர்கள் பழிவாங்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்துகிறது. போலி மாணவர்களைக் காட்டி சத்துணவு திட்டத்தில் நடந்த மோசடிகள் விசாரிக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

என்ன நடந்தது? போலியாக மாணவர்களைக் கணக்கு காட்டி அரசை ஏமாற்ற முடியுமா?

 

பம்மதுகுளம் பள்ளியில் என்ன நடந்தது?
 

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மீது தான் இப்படியொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பம்மதுகுளம் பள்ளியில் 16 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வருகைப் பதிவேடுகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், வகுப்புவாரியாக ஆய்வு செய்தபோது 230 மாணவர்கள் மட்டுமே இருந்ததாக கூறுகிறார் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன்.

 

கடந்த ஆகஸ்ட் 14, 16 ஆகிய இரு தேதிகளில் நடந்த ஆய்வுகளில் 250 மாணவர்களுக்கும் மேல் போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளதையும், அதே நாளில் பள்ளிக்கே வராத மாணவர்கள் எல்லாம் வந்ததாக பதிவேடுகளில் குறிப்பிட்டிருந்ததையும் கண்டறிந்ததாக ரவிச்சந்திரன் கூறினார்.

 

நேரில் நடத்திய ஆய்வில் தெரியவந்த உண்மை
 

"எங்களின் ஆய்வில், பல மாணவர்கள் நீண்ட விடுப்பில் இருப்பதை அறிய முடிந்தது. அதற்கான காரணம் பதிவு செய்யப்படவில்லை. வெளிமாநிலக் குழந்தைகளாக இருந்தாலும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம். 15 நாட்களுக்குள் அவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் 'ட்ராப் அவுட்' பட்டியலில் சேர்க்க வேண்டும். அதையும் அவர்கள் செய்யவில்லை. அங்கு வருகைப் பதிவேட்டில் மோசடி நடந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிய சில வழிகளை முன்னெடுத்தோம்" என்று ரவிச்சந்திரன் கூறினார்.

 

"பள்ளியில் மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்டால் அவரது ஆதார் எண்ணை எமிஸ் செயலியில் (Educational Management Information System) பதிவேற்றம் செய்ய வேண்டும். பம்மதுகுளம் பள்ளியைப் பொருத்தவரை சுமார் 440 மாணவர்களின் ஆதார் எண்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 70 பேருக்கான ஆதார் அளிப்பதில் தாமதம் நீடித்தது. இதையடுத்து, ஆதார் இயந்திரத்தை பள்ளிக்கே கொண்டு போய் அங்கேயே பதிவு செய்யலாம் என முடிவெடுத்துப் போன போது தான் இப்படியொரு மோசடியே தெரியவந்தது" என்கிறார் அவர்.

 

இட மாறுதலைத் தவிர்க்க மோசடியா?
 

தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 25 லட்சம் மாணவர்களும் உள்ளனர்.

 

ஒவ்வொரு பள்ளியிலும் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவர்கள் இருந்தால், ஆசிரியர் தேவைப்படும் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்படுவது நடைமுறை. இதைத் தவிர்க்கவே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி மோசடி செய்திருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் கூறினார்.

 

எமிஸ் மோசடி எப்படி நடந்தது? - அதிகாரிகள் விளக்கம்
 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ஒரு மாணவர் பள்ளியில் சேர்க்கப்பட்டால் அவருக்கு எமிஸ் எண் (Educational Management Information System) (EMIS))கொடுக்கப்படுகிறது. ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாற்றலாகி சென்றாலும் இந்த எமிஸ் எண் அப்படியே தொடரும். அந்த மாணவர் உயர்கல்வி செல்லும் வரையில் இடைநிற்காமல் படிப்பதை இது உறுதி செய்கிறது.

 

தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்ற பிறகு அதே மாணவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, வேறொரு பெயரில் போலி மாணவரின் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எமிஸ் செயலியில் எமிஸ் எண் மட்டுமே பிரதானமாக பார்க்கப்படுவதால் ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்வதை தடுக்கும் வசதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

திருவள்ளூர் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் எமிஸ் செயலியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

 

அரிசி, பருப்பு, முட்டைகள் எங்கே போயின?
 

"இரண்டு ஆண்டுகளாக வருகைப் பதிவேட்டில் மோசடி நடந்ததாக கூறுகின்றனர். போலி வருகைப் பதிவேட்டுக்கு தலைமை ஆசிரியை மட்டுமே காரணம் அல்ல. உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர் உள்பட பலரின் உதவி இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக ஆசிரியர்களை பழிவாங்குவதில் நியாயம் இல்லை" என்கிறார், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ்.

 

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் எமிஸ் செயலி உள்ளது. இதில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரிக்க வேண்டும். பம்மதுகுளம் பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களை பாதுகாத்த அதிகாரி யார்? தவிர, 200 மாணவர்களுக்கும் மேல் போலியாக கணக்கு காட்டி சத்துணவு பொருள்களைப் பெற்றுள்ளனர். பள்ளிக்கு சத்துணவு கொடுப்பதில் சமூக நல அலுவலர் முதற்கொண்டு இதர துறைகளின் பங்களிப்பு உள்ளது. தினசரி அரசு வழங்கிய அரிசி, பருப்பு, முட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் எங்கே போயின?

 

போலியாக கணக்கு காட்டப்பட்ட மாணவர்களுக்கான விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், புத்தகப் பை என அரசு கொடுக்கும் பொருள்களை என்ன செய்தனர் என்பது கண்டறியப்பட வேண்டும்" என்கிறார் அவர்.

 

தொடக்கக் கல்வி இயக்குநர் பதில்
 

அவரது குற்றச்சாட்டுகளை தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளிக்கு உணவுப் பொருள்களைக் கொடுப்பது சமூக நல அலுவலரின் வேலை. பள்ளி நிர்வாகம் கூறும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருள்களை அவர்கள் கொடுக்கின்றனர். தவறான கணக்குக்கு ரேஷன் பொருள் கொடுத்திருந்தால் அதன்பேரில் சமூகநலத்துறை துறை நடவடிக்கை எடுக்கும். முதலில் தவறு செய்தது பள்ளி தான். இல்லாத மாணவர்கள் இருப்பதைப் போல கணக்கு எழுதியது யார்? " என்றார்.

 

"மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்பவே ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 230 மாணவர்களே பயிலும் பம்மதுகுளம் பள்ளியில் 500 மாணவர்களுக்கான ஆசிரியர்கள் உள்ளனர். ஒரு மாணவர் பள்ளிக்கு வந்திருந்தால் அது முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். அங்கு அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை" என்கிறார் பி.ஏ.நரேஷ்.

 

கல்வியாளர்கள் வலியுறுத்தல்
 

"எமிஸ் செயலியில் போலியான தகவல்கள் பதிவேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டால் இதற்காக ஆசிரியர்கள் கையாண்ட யுக்தியைக் கண்டறிய வேண்டும். போலி மாணவர்களுக்காக மதிய உணவு, சீருடை, புத்தகம் ஆகியவற்றைப் பெற்றிருந்தால், அதனால் ஏற்பட்ட இழப்புக்கு பதில் சொல்ல வேண்டும். இந்த நஷ்டத்தை சட்டப்படி வசூல் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

 

ஆசிரியர் இடமாறுதல் விவகாரத்தில் அரசு கவனமுடன் கையாள வேண்டிய தேவையை இது உணர்த்துவதாகக் கூறும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "மாணவர் எண்ணிக்கையை கூட்டினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் என்பதற்காக இவ்வாறு நடந்திருக்கலாம். தவறு நடந்திருப்பதை நியாயப்படுத்த முடியாது. அதேநேரம், ஓர் ஆசிரியருக்கு இடமாறுதல் கொடுப்பது உறுதியானால், முந்தைய ஆண்டில் இருந்தே அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிகாரிகள் பேசலாம். அவர் போக மறுத்தால் அதற்கான காரணத்தை அறிந்து தீர்வைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது குறுக்கு வழிகளை நாடுவது களையப்படும்," என்கிறார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு