செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2024 (10:27 IST)

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின்..! அமைச்சரவை மாற்றம் குறித்து அதிரடி பதில்.!!

CM Stalin
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று இன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சரை மாற்றம் குறித்த கேள்விக்கு எதிர்பார்த்தது நடக்கும் என்று அவர் பதிலளித்துள்ளார்.
 
அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு அமெரிக்கா சென்றார். அங்கு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
 
இதையடுத்து கடந்த 2-ம் தேதி சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மொத்தம் ரூ.7,618 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stalin
உற்சாக வரவேற்பு:
 
இந்நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மற்றும் திமுகவினர் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
 
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்றார்.  இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசின் வேண்டுகோளை ஏற்று ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் செயல்பட முன்வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
 
அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக ஈர்க்கப்படும் தொழில் முதலீடுகள் குறித்து நானும் தொழில்துறை அமைச்சரும் விளக்கம் அளித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இபிஎஸ் முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 10 %கூட முதலீடு பெறப்படவில்லை என குற்றம் சாட்டிய முதல்வர், வெளிநாட்டு முதலீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது வெறும் அரசியலே என்று கூறினார்.

 
அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, சொன்னதைத் தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம், திமுக பவளவிழா நடைபெறவிருக்கும் நிலையில் நீங்கள் எதிர்பர்த்தது நடக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.