"2021" மாறும் பருவநிலையை சமாளிப்பதில் திருப்பத்தை தரும் - எப்படி தெரியுமா?
"2021" மாறும் பருவநிலையை சமாளிப்பதில் திருப்பத்தை தரும் - எப்படி தெரியுமா?
பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகளுக்கு நேரம் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில், "2021ஆம் ஆண்டு" புவி வெப்பமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஆண்டு என்பதற்கான 5 காரணங்களை கீழே கொடுத்திருக்கிறோம்.
2020ஆம் ஆண்டில் உலகம் எதிர்கொண்ட மிகப் பெரிய பிரச்னை, கொரோனா வைரஸ்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு முழுமையான தடுப்பு மருந்துகள் வந்துவிடும். எனவே அதை விட மிகப்பெரிய பிரச்னையான பருவநிலை மாற்றம் குறித்து நிறைய பேசுவோம்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், 2021ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இது முக்கியமான காலகட்டம் என நினைப்பதாக, ஐ.நாவின் பொதுச் செயலர் அன்டோனியோ கூட்டரெஷ் என்னிடம் கூறினார்.
உலக அழிவைக் கணிப்பவர்களை இந்த 2021-ம் ஆண்டு ஆச்சரியப்படுத்தும், பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம் நடக்கும் என நான் ஏன் நம்புகிறேன் என்பதைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.
1. முக்கியமான காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு
பாரிஸ் 2015 பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டுக்குப் பிறகு, அதை முன்னெடுத்துச் செல்லும் அடுத்த நாட்டை தேர்வு செய்ய வரும் நவம்பர் 2021இல் உலக தலைவர்கள் கிளாஸ்கோவில் கூடுகிறார்கள்.
பருவநிலை மாற்ற பிரச்னையை சமாளிக்க அனைவரும் உதவ வேண்டும் என எல்லா உலக நாடுகளும் இணைந்த முதல் கூட்டம் என்பதால், பாரிஸ் காலநிலை மாற்ற மாநாடு மிகவும் முக்கியமான மாநாடாகப் பார்க்கப்படுகிறது.
கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் செய்வதாகக் கூறிய நாடுகள், அதை நிறைவேற்ற முடியவில்லை என்பது தான் பிரச்னை.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், புவியின் வெப்பம் இரண்டு டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க உலக நாடுகள் பாரிஸில் ஓப்புக் கொண்டன. முடிந்தால் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் புவியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது தான் இலக்கு.
நாம் தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறோம். தற்போது இருக்கும் சூழலில் உலகின் வெப்பம் அடுத்த 12 ஆண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற இலக்கைக் கடந்துவிடும் போலத் தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துவிடும்.
உலக நாடுகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அதிகரித்துக் கொள்ள, பாரிஸ் மாநாட்டில் ஒப்புக் கொண்டார்கள். அது தான் நவம்பர் 2020-ல் க்ளாஸ்கோவில் நடக்கவிருந்தது.
கொரோனா பிரச்னையால் இந்த மாநாடு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிற்து.
கிளாஸ்கோ 2021 உலக நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவைக் குறைக்கும் இலக்கை அதிகரிக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது.
2. ஏற்கனவே பெரிய அளவில் கார்பன் உமிழ்வு அளவைக் குறைக்கும் நாடுகள்
கடந்த ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வெளியானது.
2060ஆம் ஆண்டில் சீனா கார்பன் பயன்பாட்டு சமநிலையை அடையும் என, ஐ.நா பொதுச் சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவித்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் அசந்து போய்விட்டார்கள். கார்பன் உமிழ்வைக் குறைப்பது என்பது எப்போதுமே செலவு பிடித்த வேலையாகத் தான் பார்க்கப்படுகிறது. உலகம் வெளியிடும் மொத்த கார்பனில், சீனா 28 சதவீத கார்பனை வெளியிடுகிறது. உலக அளவில் அதிக மாசுபாடுகளை ஏற்படுத்தும் நாடு சீனா தான். அப்படிப்பட்ட நாடே எந்தவித கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இல்லாமல், கார்பன் நியூட்ராலிட்டியை அடைவோம் எனக் கூறியிருக்கிறது.
மற்ற நாடுகள் எதையும் செய்யாமல் பருவநிலை மாற்றத்தின் பலன்களாக தங்களின் தொழிலாளர் வளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, தங்கள் நாட்டின் பொருளாதாரங்கள் வெளியிடும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான செலவை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும் என உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட நேரத்தில், இதற்கு முன் சீனா பங்கேற்று வந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
இந்த விஷயத்தில் சீனா மட்டும் தனியாக இல்லை. உலக அளவில் பிரிட்டன் தான் சட்டரீதியாக கார்பன் உமிழ்வை பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த ஜூன் 2019-லேயே உறுதி ஏற்ற முதல் பொருளாதார சக்தியாக உள்ளது. அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், கார்பன் உமிழ்வை முற்றிலும் தவிர்க்க உறுதி ஏற்றது.
இதைத்தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும் கார்பன் நியூட்ராலிட்டி நிலையை 2050ஆம் ஆண்டுக்குள் அடைய உறுதி எற்றிருக்கிறது. தற்போது ஐ.நாவின் கணக்குபடி, மொத்தம் 110 நாடுகள் 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் நியூட்ராலிட்டி நிலையை அடைய இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இந்த 110 நாடுகள், உலகம் வெளியிடும் மொத்த கார்பனில் 65 சதவீத கார்பனை வெளியிடுகிறது, உலகின் 70 சதவீத பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, மீண்டும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் ஒப்பந்தத்தில் இணைந்திருக்கிறது.
கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பெரிய இலக்கை, இந்த நாடுகள் எப்படி அடையப் போகின்றன என்கிற திட்டத்தை விளக்க வேண்டும். அது தான் கிளாஸ்கோ மாநாட்டின் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும். கார்பன் உமிழ்வை தவிர்த்து கார்பன் நியூட்ராலிட்டி நிலையை அடைய வேண்டும் என்கிற எண்ணமே மிகவும் முக்கியமான மாற்றமென இந்த நாடுகள் ஏற்கனவே கூறத் தொடங்கியிருக்கின்றன.
3. புதுப்பிக்கவல்ல எரிசக்தி தான் தற்போது விலை மலிவான எரிசக்தி
கார்பன் வெளியீட்டைத் தவிர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல நாடுகள் இப்போது கூறுவதற்கு ஒரு சரியான காரணம் உள்ளது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை சரிவு, கார்பன் உமிழ்வைத் தவிர்க்க ஆகும் செலவுக் கணக்கை முற்றிலும் மாற்றியிருக்கிறது.
சிறந்த சூரிய சக்தி திட்டங்கள் இப்போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மலிவான மின்சாரத்தை வழங்குகின்றன, என கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சர்வதேச எரிசக்தி நிறுவனம் ஒர் அறிக்கையை வெளியிட்டது.
உலகின் பெரும்பகுதிகளில், புதிய மின் நிலையங்களை நிறுவிக் கொண்டிருக்கும் வேளையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்கெனவே புதைபடிம எரிபொருள் சக்தியை விட மலிவானவையாக இருக்கின்றன.
உலக நாடுகள் அடுத்த சில ஆண்டுகளில் காற்றாலை, சூரிய ஒளி தகடுகள், பேட்டரிகள் போன்றவைகளில் முதலீடு செய்தால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை இன்னும் குறையும். அது வணிக ரீதியாக அர்த்தமுள்ளதாகும். அதன் பிறகு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எரிசக்திகள், மெல்ல நிலக்கரி மற்றும் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை மாற்றத் தொடங்கும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை, உற்பத்தி விதிகளைப் பின்பற்றுகிறது. ஒரு பொருளை அதிகம் உற்பத்தி செய்தால், அதன் விலை குறையும்.
முதலீட்டாளர்கள் சரியானதைச் செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பணத்தைப் பின் தொடர்ந்தாலே போதும்.
உலக நாடுகளின் அரசாங்கங்கள், தங்கள் சொந்த பொருளாதாரங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகப்படுத்துவதன் மூலம், உலகளவில் எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகின்றன.
அதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எல்லா இடங்களிலும் மலிவானதாகவும், மரபுசார் எரிசக்தி உடன் போட்டி போடும் அளவுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம், உலக அளவில் மரபுசாரா எரிசக்திக்கு மாறுவதை வேகப்படுத்த உதவுகின்றன.
4. கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது
கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் பாதுகாப்புணர்வை உலுக்கியது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத வழிகளில் நம் உலகில் தலைகீழ் மாற்றம் சாத்தியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
உலகின் மாபெரும் மந்தநிலைக்குப் பின்னர், கொரோனா வைரஸ் மிகப் பெரிய பொருளாதார அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த பிரச்னையை சமாளிக்க, பல்வேறு நாட்டின் அரசாங்கங்களும், அவற்றின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, பல நிதித் தொகுப்புகளோடு களமிறங்கியிருக்கின்றன.
நல்ல செய்தி என்னவென்றால், இந்த வகையான முதலீடுகளைச் செய்வதற்கு அரசாங்கங்களுக்கு மலிவான வட்டி விகிதத்தில் பணம் கிடைக்கிறது. உலகம் முழுவதும், வட்டி விகிதங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தில் இருக்கின்றன அல்லது மைனஸில் கூட இருக்கின்றன.
தங்கள் பொருளாதாரத்தை வழக்கம் போல் செயல்பட வைப்பதற்கும், கார்பன் இல்லாத நிலையை ஏற்படுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஜோ பைடனின் புதிய நிர்வாகம் ட்ரில்லியன் டாலர் பசுமை முதலீடுகளைச் செய்ய உறுதியளித்துள்ளன.
உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலையை குறைக்க, மற்ற நாடுகள் தங்களுடன் சேருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. இந்த இரு நாடுகளும் அதிக கார்பனை வெளியிடும் நாடுகளின் இறக்குமதி மீது கூடுதலாக வரி விதிக்க திட்டமிடுவதாகவும் எச்சரித்திருக்கின்றன.
பிரேஸில், ரஷ்யா, ஆஸ்திரேலியா செளதி அரேபியா போன்ற கார்பன் வெளியீட்டைக் குறைப்பதில் பின்தங்கிய நாடுகளிடம், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் எண்ணத்தை இது தூண்டக்கூடும் என்பதே யோசனை.
ஐ.நா சபையின் கருத்துப்படி, குறைந்த அளவில் கார்பனை வெளியிடும் ஆற்றலை விட, புதைபடிம மரபுசார்ந்த எரிபொருட்களுடன் தொடர்புடைய துறைகளில் வளர்ந்த நாடுகளே 50 சதவீதம் கூடுதலாக செலவிடுகின்றன என்பதுதான் மோசமான செய்தி.
5. பசுமை பாதையில் தொழில்கள்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை வீழ்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அழுத்தம் ஆகியவை, வணிகத்தில் இயல்புப் பண்புகளை மாற்றியிருக்கின்றன.
இதற்கு நிதி ரீதியாகவும் வலுவான காரணங்கள் இருக்கின்றன. 20-30 ஆண்டுகால செயல்பாட்டில், முதலீடு செய்யும் பணத்தைச் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பு புழக்கத்தில் இல்லாமல் வழக்கற்றுப் போகும் புதிய எண்ணெய் கிணறுகள் அல்லது நிலக்கரி மின் நிலையங்களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
சொல்லப்போனால், கார்பன் உமிழ்வுக்கு காரணமான துறைகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என அவை சிந்திக்கின்றன.
ஏற்கனவே சந்தையில் இது தர்க்க ரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை அபாரமாக அதிகரித்திருக்கிறது. உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இருந்த எக்ஸான் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வந்தது. அவ்வளவு ஏன்? டவ் ஜோன்ஸ் குறியீட்டில் இருந்தே நீக்கபட்டது எக்ஸான்.
அதே நேரத்தில் வணிக நிறுவனங்கள் தங்களின் நிதி சார்ந்த முடிவுகளில், காலநிலை மாற்றம் சார்ந்த அபாயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது வேகமெடுத்து வருகிறது.
தங்கள் செயல்பாடுகளிலும் முதலீடுகளிலும், கார்பன் உமிழ்வைத் தவிர்க்கும் மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை, வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் காண்பிக்க கட்டாயமாக்குவதே இதன் நோக்கம்.
இதைச் செய்யும் வேலையில், உலகின் எழுபது மத்திய வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன, மேலும் இந்த தேவைகளை உலகின் நிதிக் கட்டமைப்பில் உருவாக்குவது கிளாஸ்கோ மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
இதில் இன்னும் எல்லோரும் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு நிறைவடைந்த ஒப்பந்தத்துக்கு வெகு தொலைவில் உள்ளது.
1.5 டிகிரி செல்சியஸ் என்கிற இலக்கை அடைய, 2030-ம் ஆண்டின் இறுதிக்குள் உலகின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு கூட்டுக்குழு கூறுகிறது. இந்த ஐ.நா அமைப்புதான் தேவையான அறிவியல் ஒருங்கிணைப்புகளைச் செய்து கொடுக்கிறது.
இதன் பொருள் என்னவென்றால், 2020ஆம் ஆண்டில் எட்டப்பட்ட கார்பன் உமிழ்வுக் குறைப்பை, இந்த தசாப்தத்தின் இறுதிவரை, ஒவ்வொரு ஆண்டும் குறைக்க வேண்டும். கார்பன் உமிழ்வுகள் ஏற்கனவே 2019-ம் ஆண்டில் இருந்த நிலைகளுக்குத் திரும்பி வருகின்றன.
உண்மையில், பல நாடுகளும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான உயர்ந்த லட்சியங்களை வெளிப்படுத்தியுள்ளன, ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த இலக்குகளை அடைவதற்கான உத்திகள் கிடைத்திருக்கின்றன.
உலக நாடுகளை, கார்பன் உமிழ்வைக் குறைக்கத் தொடங்கும் கொள்கைகளில் கையெழுத்திட வைப்பது தான் கிளாஸ்கோ மாநாட்டின் சவாலாக இருக்கும். ஐ.நா நிலக்கரியை முற்றிலுமாக வெளியேற்ற விரும்புவதாகக் கூறுகிறது. அனைத்து புதைபடிம மரபுசார் எரிபொருள் மானியங்களுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் மற்றும் 2050க்குள் நிகர பூஜ்ஜியத்தை எட்டுவதற்கான உலகளாவிய கூட்டணி தேவை என்கிறது ஐ.நா சபை.
புவி வெப்பமடைதலைக் கையாள்வதில் உலகளாவிய உணர்வுகள் மாறத் தொடங்கியிருந்தாலும், அது மிக உயர்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.