1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (13:17 IST)

ஈரான் - அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: இந்தியர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!

ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் தீர்மானத்தை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது.
 
மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ஈரான், தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் தளத்தின் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையாக தெரிய வரவில்லை. 
 
இது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், எல்லாம் நன்மைக்கே! ஈரான் ராணுவம் அமெரிக்காவில் உள்ள இரண்டு தளங்களை ராக்கெட்டால் தாக்கியுள்ளன. அமெரிக்க ராணுவத்திடம்தான் அதிநவீன ராணுவ தளவாடங்கள் உள்ளன. நாளை தாக்குதல் குறித்த அறிக்கையோடு வருகிறேன் என கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பலமான எதிர் தாக்குதலை அமெரிக்கா தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஈரான் - அமெரிக்க தாக்குதல் எதிரொலியாக மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆம், இந்திய விமானங்கள் ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா வான்பகுதியில் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.  ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை பாக்தாத், எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் செய்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.