1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (18:51 IST)

லசித் மலிங்கா: யார்க்கர் நாயகனின் சுவாரசியமான 10 தகவல்கள்

''எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பை வழங்க என்னளவில் முயற்சித்துள்ளேன். நான் பதினைந்து ஆண்டுகள் இலங்கைக்காக விளையாடியுள்ளேன். ஆனால் அணியை விட்டு விலக இது சரியான நேரம் என நினைக்கிறேன் ஏனெனில் நாம் 2023 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தேன். நான் வெளியேறவேண்டும்''

வெள்ளிக்கிழமை நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு பெற்ற பின்னர் மலிங்கா கூறிய வார்த்தைகள் இவை.

தனது யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை மிரள வைத்த மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

10 சுவாரஸ்ய தகவல்கள்

1. லசித் மலிங்கா என உலகம் முழுவதும் அறியப்பட்டாலும் அவரது முழு பெயர் செபரமடு லசித் மாலிங்க. 1983-ல் பிறந்த மலிங்காவுக்கு வயது 35 ஆகிறது.

2. இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படும் சமிந்தா வாஸ் ஓய்வு பெற்றபின் அவரது இடத்தை நிரப்பக்கூடிய ஆளாக, பந்துவீச்சு படைக்கு தலைமையேற்று வழிநடத்தும் வீரராக இவர் விளங்கினார்.

3. மலிங்காவின் பந்துவீசும் முறை மற்றும் அவரது ஹேர்ஸ்டெயில் பலரையும் கவர்ந்த ஒன்று. வலதுகை பந்துவீச்சாளரான மலிங்காவை '' ரெத்கம எக்ஸ்பிரஸ்'' என்று ரசிகர்கள் புகழ்கிறார்கள்.

4. சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் மலிங்காதான். 2007 உலகக்கோப்பையில் 210 எடுத்தால் போட்டியில் வெற்றிபெற முடியும் எனும் இலக்கோடு தென்னாப்பிரிக்கா விளையாடியது. 32 பந்துகளில் வெற்றிக்கு நான்கு ரன்கள்தான் தேவைப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா கையில் 5 விக்கெட்டுகள் இருந்தன. 45-வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 47-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் இருவரை வெளியேற்றினார். 10 பந்துகளில் ஒரு ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா. கடைசியில் தட்டுத் தடுமாறி தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

5. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே பௌலர் மலிங்கா. 2007-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2011-ல் கென்யா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார்.

6. உலகக்கோப்பையில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் எனும் பெருமையும் மலிங்காவுக்கு மட்டுமே. வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007 உலகக்கோப்பையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராகவும் கொழும்பு மண்ணில் நடந்த 2011 உலகக்கோப்பைத் தொடரின் ஆட்டமொன்றில் கென்யாவுக்கு எதிராகவும் ஹாட்ரிக் எடுத்தார்.

7. 1983 உலகக்கோப்பையில் கபில்தேவ் - கிர்மானி படைத்த ஒரு சாதனை 27 ஆண்டுகளுக்கு பின்னர் மலிங்கா - மேத்யூஸ் ஜோடியால் தகர்க்கப்பட்டது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில்தேவ் - கிர்மானி இணை 9 வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்ந்திருந்தது. 2010 -ல் மெல்பர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் - மலிங்கா இணை 9-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அப்போட்டியில் 240 ரன்களைத் துரத்திய இலங்கை அணி 107 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் மலிங்கா - மேத்யூஸின் அபார ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மலிங்கா அப்போட்டியில் 48 பந்துகளைச் சந்தித்து ஆறு பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் விளாசி 56 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

8. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 10 பேரில் மூவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். முரளிதரன் 534 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். வாஸ் 322 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மலிங்கா 15 ஆண்டுகளில் 226 போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

9. ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஓர் ஆட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் மலிங்கா உள்ளார். பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 13 முறை குறைந்தது 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முரளிதரன் 10 முறை இதைச் சாத்தியப்படுத்தினார். அப்ரிடி மற்றும் பிரெட் லீ 9 முறை சாதித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக எட்டு முறை ஒருநாள் போட்டிகளில் குறைந்தது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மலிங்கா. 11 முறை நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.

10. ஐக்கிய அமீரகம் அணிக்கு எதிராக 2004-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய மலிங்கா தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ளார். இப்போட்டியில் தான் வீசிய கடைசி பந்தில் விக்கெட் எடுத்தார். அந்த பந்தோடு வங்கதேச அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்தது. இலங்கை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் மலிங்கா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2011-ல் ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டிகளில் 2019-ல் ஓய்வு பெற்றார். டி 20 போட்டிகளில் அடுத்தாண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை வரை விளையாடுவேன் என மலிங்கா கூறியுள்ளார்.