செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

சீனா- அமெரிக்கா பதற்றம்: புதிய பனிப்போருக்கு தயாராகிறதா உலகம்?

இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, தனது 75 ஆண்டுகளை முடித்திருக்கிறது.
 

பல தரப்பு (Multilateralism) என்ற ஒரு விஷயம் சீர்குலையும் நிலையில் இருப்பதாக முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி-மூன் ஒருமுறை  தெரிவித்திருந்தார்.
 
அமெரிக்கர்களுக்கே முதல் முன்னுரிமை, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், இரான் அணு ஒப்பந்தம், ஆகியவற்றில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்ற, ஐ.நாவின் புது ஆதரவாளராக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. ஆனால், சீனாவின் ஆதரவுக்கு ஒரு விலையும் இருக்கிறது.
 
உலக சுகாதார அமைப்பு போன்ற ஐ.நா அமைப்புகளுக்கு சீனா அதிக நிதி வழங்கினால், அதற்கேற்ற பலன்களையும் அந்நாடு எதிர்பார்க்கும்.
 
ஏற்கெனவே பல நாடுகளில் போர், தொற்று நோய் போன்ற பல சவால்களை ஐ.நா எதிர்கொண்டு வருகிறது. ஒற்றுமை என்ற ஒரு விஷயம் எவ்வளவு முக்கியம் என்பது ஐ.நாவை உருவாக்கியவர்களுக்கு நன்கு தெரியும் என்று அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் கூறியுள்ளார்.
 
அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமை உணர்வு உலகின் ஸ்திரத்தன்மையை எவ்வாறு மாற்றும் என்பது குறித்த கவலை பல உலக  தலைவர்களுக்கும் இருப்பதை காண முடிகிறது.
 
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், இந்த உலகத்தின் எதிர்காலத்தை சீனா, அமெரிக்கா இடையே இருக்கும் உறவு முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
 
இந்த இரு நாடுகளும் வணிகம், தொழில்நுட்பம் போன்ற பல விஷயங்களில் மோதல் போக்கைக் கொண்டிருக்கின்றன.
 
அத்துடன், இந்த ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது, "சீன வைரஸ்" என்று குறிப்பிட்டது, அந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளார். சீனாவை தாக்கவே இந்த ஐ.நா மேடையை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
 
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 40 நாட்களே இருக்க, சீனாவை குற்றம்சாட்டுவது என்பதையே, தனது தேர்தல் பிரசாரத்தின் மையாக வைத்திருக்கிறார்  டிரம்ப்.
 
டிரம்ப் அமெரிக்காவில் கொரோனா தொற்றை கையாள எடுத்த முயற்சிகளின் குறைபாட்டை மறைக்க, சீனா மீது இவ்வாறு தொடர்ந்து குற்றம்சாட்டுவது போல இது  தோன்றுகிறது.
 
அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கத்திற்காக போட்டியிட்டுக் கொள்வது, ராணுவ மோதலுக்கு வழிவகுக்குமா? இதற்கான விடை ஐ.நா பொதுச்செயலாளர்  அன்டோனியோ கூட்டரெஷின் உரையில் இருந்தது.
 
மீண்டும் ஒரு 'பனிப்போர்' ஏற்படும் அபாயம் இருப்பதாக கூட்டரெஷ் கவலை வெளியிட்டுள்ளார்.
 
"நாம் அபாயகரமான சூழலை நோக்கி நகர்கிறோம். உலகின் இரு பெரிய பொருளாதாரங்களும் இவ்வாறு அவர்களுக்கான வணிகம், நிதி கட்டுப்பாடுகள், இணையம்  என தனித்தனியே செயல்பட்டால் அது உலகிற்கு நல்லதல்ல. தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பிரிவு புவிசார் மூலோபாய பிரிவாகவும், ராணுவ பிளவாகவும்  உருவெடுக்கும். இதனை நாம் எந்த சூழ்நிலையிலும் தவிர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 
பிளவு ஏற்படுவது குறித்து நடைபெற்ற விவாதம், இந்த உலகம் எப்படி வேகமாக மாறி வருகிறது என்பதையும், அதற்கு ஈடு கொடுக்க வெளியுறவு அதிகாரிகள் சிரமப்படுவதையும் காண்பிக்கிறது.
 
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "எந்த ஒரு நாட்டுடனும் பனிப்போர் அல்லது உண்மையான போரில் ஈடுபடுவது சீனாவின் நோக்கம்  இல்லை" என்று குறிப்பிட்டார்.
 
அதிபர் டிரம்ப், சீனாவுடனான பதற்றத்தை எந்தளவிற்கு அதிகரித்து விட்டிருக்கிறார் என்பது இந்த பேச்சின் மூலம் தெரிய வருகிறது.
 
ஐநாவில் நடைபெறும் விவாதம் எப்போதும் ஒரு புதிய படைப்பின் குழப்பமாகவே பார்க்கப்படும் என அனுபவம் வாய்ந்த வெளியுறவு அதிகாரி ஒருவர் என்னிடம்  கூறினார்.
 
உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு கைக்குலுக்கிக் கொள்வது, தனியே பார்த்து பேசிக் கொள்வது என உண்மையான ராஜதந்திர விஷங்கள்  நடைபெறும். ஆனால், இப்போது இது வெறும் குழப்பமாக மட்டுமே இருக்கிறது.
 
ஒருவர் யார் பொறுப்பு என்று மறைமுகமாக கேட்பதும், எந்த உலகத் தலைவருக்கு சுய ஆர்வம் அதிகம் என்றெல்லாம் பேசப்படுகிறது. இந்த பெருந்தொற்று உலகில் நிலவும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக இருக்கிறது என்பது ஐ.நா பொதுச்செயலாளரின் பார்வையாக உள்ளது.
 
மக்கள் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்கிறார்கள், இந்த புவி எரிகிறது என்று குறிப்பிட்ட அவர், இவற்றையெல்லாம் தாண்டி நம் முன் இருக்கும் சவால்களுக்கு, இந்த கோவிட் 19 தொற்றை உலகத் தலைவர்கள் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.