வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (16:35 IST)

முரண்டு பிடித்த தினகரன் ; அதிரடி காட்டிய மத்திய அரசு - ரெய்டின் பின்னணி?

இரட்டை இலை விவகாரத்தில் இணக்கம் காட்ட தினகரன் மறுத்து வருவதே சசிகலா உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு முக்கிய காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெயா தொலைக்காட்சி, தினகரன், திவாகரன், இளவரசியின் மகன் விவேக், நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதோடு, அரசியல் ரீதியாக சசிகலா குடும்பத்தினருக்கு உதவி செய்பவர்களையும் குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் 4 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடந்தது.  இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆந்திர, கார்நாடக மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கை சசிகலா உறவினர்களை ஆட்டம் காண செய்துள்ளது. இது வழக்கமான நடைமுறைதான் என பாஜகவினர் கூறினாலும், இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.
 
எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அண்ட் கோ-வை பிடிக்காத தினகரன், தனியாக செயல்பட்டு எடப்பாடிக்கும் மட்டுமில்லாமல், மத்திய அரசிற்கும் குடைச்சல் கொடுத்து வருகிறார். எடப்பாடியை கையில் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருக்கும் பாஜகவிற்கு இது பெரிய தலைவலியாக இருக்கிறது. 


 

 
முக்கியமாக இரட்டை இலை விவகாரத்தில் அவராலேயே தேர்தல் கமிஷனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. ஏனெனில், எடப்பாடியின் கையில் இரட்டை இலை சென்றுவிடக்கூடாது என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். இதனால், கோபமடைந்த டெல்லி, அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு பலமுறை தினகரனை எச்சரித்தது. ஆனால், தினகரன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற முடிவில் அவர் இருக்கிறார். 
 
எனவேதான், இந்த ரெய்டை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் சசிகலா உறவினர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி, தினகரனை முடக்குவதே மத்திய அரசின் நோக்கம் எனத் தெரிகிறது. அதனால்தான், திவாகரன், நடராஜன், விவேக், ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன், கொடநாடு எஸ்டேட், சசிகலா பரோலில் வெளிவந்த போது தங்கிய கிருஷ்ணப்பிரியாவின் வீடு என ஒரு இடத்தை கூட விட்டுவைக்க வில்லை.
 
இந்த சோதனைக்கு மத்திய அரசு வெகுநாட்களாகவே திட்டமிட்டமிட்டிருந்தது எனக் கூறப்படுகிறது. இதில், தினகரன் இறங்கி வருவாரா அல்லது மீண்டும் முரண்டு பிடிப்பாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.