வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (06:37 IST)

கழுதையின் கனவும் ஸ்டாலின் கனவும் ஒன்றுதான்: ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று இராமநாதபுரத்தில் புரட்சித் தலைவி அம்மா அணியினரின் பொதுக்கூட்டம் ஒன்று பிரமாண்டமாக நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், ஸ்டாலின் முதல்வர் கனவு காண்பது குறித்தும் ஓபிஎஸ் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது: 



 
 
காஞ்சியில் தொடங்கி, 9 வது மாவட்டமாக இங்கு கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்ட நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.  ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக கலந்தது ராமநாதபுரம் மண். ராவணனை அழிக்க ராமர் கால் பதித்த பூமி இது. கூனியின் சூழ்ச்சியால் ராமர் ஆட்சியை இழந்தார். சில சூழ்ச்சிகாரர்களின் சதியால் நாம் அம்மாவின் ஆட்சியை இழந்திருக்கிறோம். அதற்கு காரணமான நம் எதிரிகளை பழி வாங்க இங்கு சபதம் எடுப்போம்.
 
வறட்சி மாவட்டம் உங்கள் எழுச்சியால் புரட்சி மாவட்டமாக மாறியிருக்கிறது. நமது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தினம் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து கொண்டிருக்கிறார்கள். யாரை பார்த்து நான் சிரித்தேன் என குற்றம் சொன்னார்களோ அதே நபருடன் (ஸ்டாலின்) எடப்பாடி கூட்டணி வைத்து சட்டமன்றத்திற்குள் செயல்படுகிறார். தன்னை கொடுமை படுத்தி வேலை வாங்கும் முதலாளி ஒழுங்காக படிக்காத அவரது மகளை  தனக்கு கட்டி வைப்பார் என கழுதை ஒன்று கனவு கண்டதாம். அதே போல்தான் தான் முதல்வராகி விடலாம் என ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். கழுதையின் கனவு போல் ஸ்டாலினின் கனவும் நிறைவேறப் போவதில்லை. 
 
இவ்வாறு ஓபிஎஸ் ஆவேசமாக பேசினார்.