வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (17:31 IST)

அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் அமைச்சர்கள் - எடப்பாடி பதவிக்கு ஆபத்து?

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று அரசியல் செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தங்கமணி ஆகியோரின் செய்கையால் அதிமுக கட்சியில் மீண்டும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.



 
அதிமுக ஜெயலலிதாவைன் கோட்டையாக இருந்த போது, யாரும் அந்த அவரை கண்டித்தோ, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தோ, ஒரு ஆர்பாட்டம் அறிக்கை விட்டதில்லை, மேலும் கோஷ்டி பூசல் என்பது கட்சியில் அப்போது இல்லை, ஆனால் அவரது மறைவிற்கு பின்பு அ.தி.மு.க கட்சியானது அ.தி.மு.க அம்மா அணி, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி என்று இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும்,  தற்போது சிறைக்கு சென்று திரும்பிய அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை இதுவரை 32 அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்கையினால் தற்போது கரூர் மாவட்ட அ.தி.மு.க மற்றும் திருச்சி மாவட்ட அ.தி.மு.க என்று ஒரே கட்சி, ஒரே அணியில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.. கரூர் அருகே உள்ள காகித ஆலைக்கு சொந்தமான டி.என்.பி.எல் நிறுவனத்தின் விரிவாக்கமும், அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையானது, திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அமைந்துள்ளது. 
 
இன்று அந்த நிறுவனத்திற்கு சென்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அங்குள்ள உள்ளூர் அமைச்சரான அதாவது திருச்சி அமைச்சரான வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல், அங்குள்ள எம்.எல்.ஏ அதாவது மணப்பாறை தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ சந்திரசேகர் ஆகியோரை அழைக்காமல், அங்குள்ள அவர்களது மாவட்டம், மற்றும் அவர்களது தொகுதியில் விசிட் அடித்துள்ளார்.
 
அங்குள்ள டி.என்.பி.எல் நிறுவனத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு, அந்த தொழிற்சாலையை ஆய்வும் செய்துள்ளார். அவரோடு,  நாமக்கல் மாவட்ட செயலாளரும், மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வு மதுவிலக்கு அமைச்சருமான பி.தங்கமணி மற்றும் தொழிற்துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் ஆகியோர் கொண்ட குழு அங்கு சென்றுள்ளது. 
 
இவர்களது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அரசியல் சம்பந்தமாக தான் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளருமான பரஞ்சோதி இன்று ஒ.பி.எஸ் அணியில் இணைந்தாரா ? என்று கேள்வியும் எழுந்துள்ளது.
 
மரக்கன்று நடவா? மூன்று அமைச்சர்கள் என்ற கேள்வி மக்களிடம் எழுந்த நிலையில் இன்று வேறு ஒரு நிகழ்வு கரூர் மாவட்ட மக்களை மிகவும் பாதித்து உள்ளது.  கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர்கள் தங்கள் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என  நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது இதனை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் கரூர் மற்றும் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 


 

 
மேலும், புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க ரூ.231 கோடியே 23 லட்சம் நிதியும், கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்க நிதியும் ஒதுக்கீடும் செய்தார். ஆனால் இன்று புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  விழாவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்டு புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். 
 
ஆனால் அதே முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசை அதாவது ஆணையை கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உதாசினபடுத்தியதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கரூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படுமா என்ற சந்தேகம் அந்த ஊர் மக்களுக்கு எழுந்துள்ளது.
 
இந்த உள்ளூர் அமைச்சர்களின் லோக்கல் அரசியல் காழ்புணர்ச்சியால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜெ.வின் ஆசையை நிறைவேற்றிய அ.தி.மு.கவினர், கரூரிலும் மருத்துவக்கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
- சிறப்பு நிருபர் சி.ஆனந்தகுமார்