ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல்.. பிராட்பேண்ட் சேவையில் புதிய சாதனை...
இந்தியாவின் நிலையான பிராட்பேண்ட் மற்றும் ஹோம் இன்டர்நெட் சேவைகளுக்கான புதிய அறிக்கையை ஓபன் சிக்னல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சோதனையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, பார்தி ஏர்டெல் நிறுவனம் அனைத்து பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
பதிவிறக்கம், பதிவேற்றம், நம்பகத்தன்மை, சீரான தரம் மற்றும் வீடியோ அனுபவம் உள்ளிட்ட அனைத்து பரிமாணங்களிலும் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜியோவை விட 26 முதல் 27 சதவீதம் வரை அதிவேக டவுன்லோடு மற்றும் அப்லோடு ஸ்பீடை ஏர்டெல் வழங்கி வருகிறது.
வயர்லெஸ் ஹோம் இன்டர்நெட் எனப்படும் எப்.டபிள்யூ.ஏ பிரிவிலும் ஏர்டெல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. ஏர்டெல் ஏர்ஃபைபர் சராசரியாக 32.4 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை வழங்கியுள்ள நிலையில், ஜியோ 25.7 எம்பிபிஎஸ் வேகத்தையே பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், இணையத்தின் வேகமும் தரமும் என்று வரும்போது ஏர்டெல் முதலிடத்தை பிடித்துள்ளது நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

