வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (16:33 IST)

சகிப்பின்மையை காரணம் கூறி விருதுகளை திருப்பி தந்த எழுத்தாளர்கள்

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக காரணம் கூறி சாகித்ய அகாடமி விருது பெற்ற பல எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை எற்படுத்தியது. மேலும் எழுத்தாளர்களின் இந்த செயல் மத்திய அரசுக்கு அவமானத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியது.


 

 
கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி, தாத்ரி மாவட்டத்தில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், சமூக ஆர்வலர் மல்லிகார்ஜீனனை தாக்கிய சிவசேனா தொண்டர்கள்  அவர் மீதி கருப்புமையை பூசிய சம்பவம் போன்றவை எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 
 
முதன் முதலாக, நேருவின் உறவினரும்,  1986 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நயன்தாரா ஷேகல் தன்னுடைய விருதை அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்தியாவின் பன்முகத்தன்மையின் மீதான கடுமையான தாக்குதல்களை கண்டிக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, தனது விருதை அவர் திருப்பி அளிப்பதாக கூறினார்.


 

 
அவரைதொடர்ந்து மத நல்லிணக்கம் நசுக்கப்படுவதை காரனம் காட்டி கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ், ஆந்திர எழுத்தாளர் பூபால் ரெட்டி, 17 வயது கன்னட இளம்பெண் எழுத்தாளர் ரியா விதாஷா உட்பட 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி தங்கள் எதிர்பை தெரிவித்தனர். பஞ்சாபி எழுத்தாளர் தலிப்கௌர் டிவானா மத்திய அரசு அளித்த பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார். 
 
மேலும், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், தலித்துகள் கழுத்தறுக்கப்படும் எரித்துக் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறி பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தனக்கு வழங்கபட்ட தேசிய விருதை மத்திய அரசுக்கு  திருப்பி அனுப்பினார்.


 

 
மேலும், இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 24 பிரமுகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளைத் திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்தனர்.
 
இப்படி பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் விருதுகளை திருப்பி அனுப்புவதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  “இது தவறான அரசியல் சதியாகும். அசோக சின்னம் தாங்கிய எந்த ஒரு விருதும் தேசிய கவுரவமாகும். அவற்றை திரும்ப ஒப்படைப்பது தேசத்தை அவமதிக்கும் செயல்” என்று கூறினார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, விருதுகளை திருப்பி அனுப்புவது சகிப்புத்தன்மை அற்ற செயல் என்றும், பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்காக, விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள் என்றும், விருதை ஒப்படைப்பவர்கள் வேறு காரியங்களுக்காக அரசியல் செய்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.
 
எழுத்தாளர்களின் இந்த அதிரடி செயலால் அதிர்ச்சியடைந்த சாகித்ய அகாடமி, விருதுகளை ஒப்படைத்த எழுத்தாளர்கள் அவற்றை மீண்டும் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
 
சாகித்ய அகாடமி விருதுகள் அரசாங்கம் அளிக்கும் விருது அல்ல. அதனை திருப்பிக் கொடுத்து உங்கள் கோபத்தை தெரிவித்துள்ளீர்கள். அதே நேரத்தில் தற்போது உங்கள் கோபம் தணிந்து மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் விருதை திருப்பிக் கொடுத்த எந்த எழுத்தாளர்களும், மீண்டும் தங்கள் விருதுகளை பெற்றுக்கொள்ளவில்லை.
 
மொத்தத்தில் சகிப்பின்மையை காரணம் கூறி எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி கொடுத்த விவகாரம், 2015 ஆம் ஆண்டு மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு ஒரு கரும்புள்ளியாக திகழ்கிறது.