வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (16:20 IST)

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி இஸ்லாமியர் அடித்து கொலை

உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 

 
உத்திரப்பிரதேச மாநிலம்  தாத்ரி மாவட்டத்தில் உள்ள  பிசடா கிராமத்தில் வசித்து வந்தவர் அக்லாப். அவர் செப்டம்பர் மதம் தன்னுடைய வீட்டில் பசுமாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார் என்று கூறி ஒரு கும்பல் அவரை அடித்து கொலை செய்தது. 
 
இந்த தாக்குதலில் அக்லாப்பின் மகன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின் அங்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அக்லாப்பின் வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாக வெளியான தகவல் புரளி என்பது தெரியவந்தது.
 
இந்த கொலை தொடர்பாக அம்மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது. பொதுமக்களின் தாக்குதலால் உயிரிழந்த அக்லாப்பின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உத்திரப்பிரதேச அரசு வழங்கியது.
 
அந்த வழக்கு தொடர்பாக சிவசேனா இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டார்கள். முதியவர் அக்லாக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மத சகிப்புத்தன்மை குறித்த பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
 
இதற்கு ஆளும் பாஜக ஆட்சியே காரணம் என்று எதிர்கட்சிகள் களத்தில் இறங்கின. பிரதமர் மோடி இந்த கொலை பற்றி வாய் திறக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதனால் நீண்ட மௌனத்திற்கு பிறகு பிரதமர் மோடி வாய் திறந்தார்.
 
இதுபற்றி பேசிய அவர் “தாத்ரி விவகாரம் உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. ஆனால், இதில் மத்திய அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில், பாரதிய ஜனதா மீது மதவாதக் குற்றச்சாட்டை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள், பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகின்றன” என்று குற்றம் சாட்டினார் மோடி.
 
முதியவர் அக்லாக் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய தேசிய சிறுபான்மை ஆணையத்தைச் சேர்ந்த குழு ஒன்று தாத்ரி மாவட்டத்திற்கு சென்றது. அவர்களின் விசாரனையில், இண்டஹ் கொலை முன் கூட்டியே திட்டமிட்டது என்றும், இந்துக் கோவில் ஒன்றில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என அந்த ஆணையம் கூறியது. 


 

 
விவசாயக் கூலியான அக்லாக், தன் வீட்டில் தன் மகனுக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, கத்திகள், பிஸ்டல்கள், கம்புகளுடன் வந்த ஒரு கும்பல், பசுவைக் கொன்று சாப்பிட்டதாக கூறி அவர்களைத் தாக்கியதாக கூறப்பட்டது  
 
அவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசம், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டது. ஆனால், பின்பு நடத்தப்பட்ட சோதனையில் அது ஆட்டுக்கறி எனத் தெரியவந்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையும் தனியாக விசாரணை ஒன்றை நடத்திவருகிறது.
 
இந்த சம்பவத்திற்கு பிறகு, மாட்டுக்கறி யாரும் சாப்பிடக்கூடாது என்று இந்து முன்னனி அமைப்பினர் மற்றும் பாஜாக-வினர் கையில் எடுத்தனர். முஸ்லீம்களை கருத்தில் கொண்டே இப்படி பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவிற்கு கொலை மிரட்டல் விடும் அளவுக்கு மாட்டுக்கறி விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.