1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2015 (21:05 IST)

நாட்டையே உலுக்கிய டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் இளம் குற்றவாளி விடுதலை

நாட்டையே அதிர்ச்சுக்குள்ளாக்கிய டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு வழக்கில் இளம் குற்றவாளி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் பலத்த சர்ச்சையை கிளப்பியது.


 

 
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும், அந்த பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக ஆறு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனுக்கு 17 வயதே ஆனதால் அவன் மட்டும் சிறார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். மற்ற 5 பேரில் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றவர்களான வினய், முகேஷ், பவன், அக்ஷய் ஆகியோர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது
 
இளம் குற்றவாளிக்கு குற்றம் நிகழ்ந்த காலத்தில் 18 வயது நிறைவடைய சில மாதங்களே இருந்தது. அதனால் அவன், சிறார் குற்றவாளியாக கருதப்பட்டு மூன்றாண்டுகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அதையடுத்து, டெல்லியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட அந்த குற்றவாளி தண்டனைக் காலம் முடிந்து டிசம்பர் 20ஆம் தேதி விடுதலையாவதாக இருந்தது.
 
அந்நிலையில், அவன் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடுவான் என்பதால் அவனை சுதந்திரமாக நடமாட விடக்கூடாது  என பலியான மாணவியின் பெற்றோர் வலியுறுத்தினர். அவனை விடுதலை செய்யவே கூடாது. விடுதலை செய்வதானால், நிச்சயமாக அவனது முகத்தை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


 

 
அவன் முழுமையாக திருந்தி விட்டான் என்பது உறுதியாகும் வரை, மற்றும் அவனால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பது தெளிவாகும் வரை அவனை விடுதலை செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞருமான சுப்பிரமணிய சுவாமி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், தண்டனை காலம் முடிந்த பின்பும் குற்றவாளியை சிறையில் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி அவரின் மனுவை நிராகரித்தது. அதேவேளையில், அவனை கண்காணிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அந்த கமிட்டி அவனது நடவடிக்கையை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்தது. 
 
அதனால், அவன் விடுதலை ஆவது உறுதியானது. அவன் விடுதலையாகும் போது,பொதுமக்களால் தாக்கப்படுவானோ என்ற அச்சமும் நிலவியது. அதிர்ச்சியூட்டும் செய்தியாக, அவன் விடுதலையானதும் காஷ்மீரை மையமாக கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி பீதியை கிளப்பியது.
 
அந்நிலையில், டெல்லி பெண்கள் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவனின் விடுதலையை எதிர்த்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் சார்பில், டிசம்பர்  20ஆம் தேதி,  நள்ளிரவு 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் வீட்டிற்கு சென்று அவசர விடுமுறை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.கே.கோயல், திரு.யூ.யூ லலிதி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு விசாரித்தது.
 
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  வழக்கில் மனுதாரரின் கவலையை பகிர்ந்துகொள்ளும் அதேநேரத்தில், இங்கு அனைத்து விஷயங்களும் சட்டத்துக்குட்பட்டே நடைபெறுவதாகவும், சட்டத்தை மீறி செயல்படுவதற்கில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துவிட்டனர். மேலும், சட்டப்படி விடுவிக்கப்பட்ட சிறுவனின் சுதந்திரத்தை தடுக்க முடியாது என்றும், அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையை பறிக்க இயலாது என்று கூறிய நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். அதனால் அவனின் விடுதலையை தடுக்க முடியவில்லை.
 
அதனால் அதிருப்தி அடைந்த நிர்பயாவின் பெற்றோர், சிறார் குற்றவாளி குறித்த சட்ட திருத்தம் மேற்கொள்ள இன்னும் எத்தனை நிர்பயாக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினர். மேலும், இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். அவர்களுக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.


 

 
அதன் எதிரொலியாக, டிசம்பர் 22 ஆம் தேதி,  மாநிலங்களவையில் அது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிறார் வயது வரம்புக்கான புதிய மசோதா முன் வைக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் ஆதரவுடன் அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
 
அதன் மூலம், கடுமையான குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க அந்த மசோதா வழிவகை செய்யும் என அறிவிக்கப்பட்டது. அந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, பின் சட்டமாக்கப்படும் என்பது நெறிமுறை.
 
தன் மகளை கடுமையாக தாக்கி, கற்பழித்து கொன்ற அந்த குற்றவாளி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது என்று போராடிவரும் அந்த பெற்றோர்களின் குறிக்கோள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.