வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2015 (17:51 IST)

சகிப்பின்மை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் கான்கள்

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கானும் அமீர்கானும் தெரிவித்த கருத்துகளும், அதனால் அவர்களுக்கு எழுந்த எதிர்ப்பு அலைகளும் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 50 வது பிறந்த நாளை நவம்பர் 2 ஆம் தேதி மும்பையில் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் “மதசார்பற்ற நாடான இந்தியாவில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. தற்போது, இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இது இப்படியே தொடரும் எனில், முன்னனி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் தடைக்கற்களாக இருக்கும்” என கூறினார்.
 
அவரின் இந்த பேச்சுக்கு மதவாத அமைப்பினர் மற்றும் பாஜக-வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். விஷ்வ இந்து பரிஷ்த் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி “ஷாருக்கான் பாகிஸ்தானின் கைக்கூலி. சகிப்புத்தன்மை தொடர்பாக அவர் கூறிய கருத்திற்காக, அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை ஷாருக்கான் திருப்பியளிக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
 
பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் “ஷாருக்கான் பயங்கரவாதிகளின் மொழியில் பேசுகிறார். ஷாருக்கானின் மொழிக்கும் ஹபீஸ் சயீதின் மொழிக்கும் அதிக வித்தியாசமில்லை. இவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை வரவேற்கிறோம். இந்தியாவின் பெருமையை சீர்குலைப்பவர்களுக்கு அப்போதாவது புரியும்” என்று கூறினார்.

 


 
மேலும், சிவசேனா அமைப்பினர் அவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர்.  அதில் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதில் கோபமடைந்த ஷாருக்கான் “இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை தீவிரமடைந்து வருகிறது. நம்முடைய நாடு வளர விரும்பினால், இந்தியாவில் நிலவும் பல்வகையான கலாச்சரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்து மதங்களும் சமமானது என்று நாம் நம்பவில்லை என்றால் நாடு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாது.
 
மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்பின்மையைக் களைந்து, நாட்டை வளர்ச்சி அடைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையை வளர்க்க வேண்டும். இல்லை என்றால் தேசப்பற்றின் பெயரால் மோசமான செயல்கள் நடக்கும். சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவாக எனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதினை திருப்பி அளிக்க தயார்" என்று கூறினார்.
 
கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மத, சாதி அடிப்படைவாதிகளின் செயலுக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். 
 
ஷாருக்கானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த,  மத்திய பிரதேச மாநில முன்னாள் பஜக பொதுச் செயலாளர் விஜயவர்கியா தனது ட்விட்டர் பக்கத்தில் “ஷாருக்கான் இந்தியாவில் வாழ்ந்தாலும் அவரது இதயம் பாகிஸ்தானில் உள்ளது. அவரது படங்கள் இங்கே கோடிகளை குவித்து வருகிறது.  ஆனால் அவர் இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்பதை கண்டறிந்துள்ளார் " என்று கருத்து தெரிவித்தார்.
 
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹபீஸ்முஹமது சையது தனது டுவிட்டர் பக்கத்தில்,  “இந்தியாவிற்கு உள்ளே ஒரு நிலையான அடையாளத்திற்கு போராடிக்கொண்டு இருக்கும் முஸ்லிம்கள் எவரும், அவர்கள் விளையாட்டு, கல்வி, கலை, கலாச்சாரம் ஆகிய எந்த துறையில் இருந்தாலும் சரி. 
 
ஷாருக்கான் உள்ளிட்ட எவரும் தாங்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காக இந்தியாவில் பாரபட்சமாக நடத்தப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது இந்தியாவில் வாழ்வதை சிரமமாக உணர்ந்தாலும் சரி அவர்கள் பாகிஸ்தானிற்கு வந்து தங்கிக் கொள்ளலாம்” என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். 


 

 
இருந்தாலும் ஷாருக்கானின் கருத்துக்கு எதிர்ப்பு குறைந்தபாடில்லை. தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள  “தில்வாலே” திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று மதவாத அமைப்பினர் சில திரையரங்குகள் முன் போராட்டம் நடத்திக் கொண்டிக்கிறார்கள்.  
 
அடுத்து, அதே சகிப்புத்தன்மை பற்றி பாலிவுட் நடிகர் அமீர்கன் கூறிய கருத்துகளும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
 
அவர் கூறியபோது “என் மனைவி என்னிடம், நாம் இத்தனை நாள் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். நாட்டில் குறைந்து வரும் சகிப்புத்தன்மையை பார்க்கும் போது பயமாக 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

இருக்கிறது. ஒவ்வோரு நாளும் செய்தித்தாட்களை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே வேறு நாட்டிற்கு சென்று விடலாமா என்று என்னிடம் கேட்டார். அவர் தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொள்கிறார்.  நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகிவருவதையே இது காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்தார்.


 

 
அமீர்கானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் மீது காவல் நிலையத்தில் பூகார் மற்றும் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு ஆகியவை தொடுக்கப்பட்டது.  
 
அவரின் வீட்டு முன்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அமீர்கானின் கருத்தை, பாஜாக மற்றும் சிவசேனா அமைப்பினர் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். ஷாருக்கானை கூறியது போலவே, பாஜக மற்றும் இந்து மதவாத அமைப்பினர் அமீர்கானையும் “இந்தியாவில் வாழ்வது பிடிக்கவில்லையென்றால் பாகிஸ்தானுக்கு செல்” என்று கூச்சலிட்டனர்.
 
ஒரு படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்ற அமீர்கான், லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அந்த ஹோட்டலில் வெளியே அவருக்கு எதிராக சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவரது புகைப்படங்களை எரித்தனர்.


 

 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன் “அமீர்கான் தங்கியிருக்கும் இந்த ஹோட்டலில் உழியர்களுக்கும், அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு தருகிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்கள் அமீர்கானின் கன்னத்தில் அறையும் ஒவ்வொரு அறைக்கும் ஒரு லட்சம் பரிசு தரப்படும்” என்று தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியது.
 
மேலும், அமீர்கானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் விளம்பர தூதராக இருக்கும் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் அப்ளிகேஷனை தங்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த பலர்,  அதை நீக்கம் செய்தனர். 
 
இரண்டு நாட்களில் சுமார் 1 லட்சம் பேர் இப்படி ஸ்நாப்டீல் அப்ளிகேஷனை நீக்கம் செய்தனர். மேலும் ஸ்நாப்டீலுக்கு வழங்கியிருந்த தர ரேட்டிங்கை குறைத்து பதிவிட்டனர். ஐந்து ஸ்டார் கொடுத்தவர்கள் கூட, இந்த சர்ச்சைக்கு பின் ஒரு ஸ்டார்தான் கொடுத்தனர். மொபைல் வாடிக்கையாளர்களின் இந்த அதிரடி செய்கையால், ஸ்நாப்டீல் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.
 
ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பினாலும், மறுபுறம் அவருக்கும் ஆதரவும் கிளம்பியது. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அமீர்கானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் உண்மையானவை. அவருடைய கருத்தை நான் வரவேற்க்கிறேன்” என்று கூறினார். இதுபற்றி கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அமீர்கான் சந்தித்த பிரச்சனையை தானும் சந்தித்தாக கூறினார். 
 
இருந்தாலும், மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு சிவசேனை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு, போராட்டங்கள் நடத்தினர். அதனால், அமீர்கானின் மனைவி கிரணும் அவரது மகன் ஆசாத்தும், அவரது வீட்டிலிருந்து பத்திரமாக வெளியேற்றபட்டு, வெளியூருக்கு அனுப்பப்பட்டதாகவும், வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக மற்றோரு தகவலும் அப்போது வெளியானது. 


 

 
ஆனால், அவ்வளவு எதிர்ப்பு கிளம்பியும், அமீர்கான் தான் தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக இருந்தார். 
 
அவர் வெளியிட்ட அறிக்கையில் "எனக்கும், என் மனைவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை. என்னை தேச எதிர்ப்பாளராக அழைக்கும் அனைவருக்கும் 'நான் ஒரு பெருமித இந்தியன்' என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். நான் மனம் திறந்து பேசியதற்காக, என்னை நோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட அந்தக் கருத்தை மட்டும்தான் நிரூபித்திருக்கிறார்கள். நான் ஏற்கெனவே கூறிய கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன்"என்று கூறிவிட்டார் அமீர்கான்.
 
இப்படி சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர்கள் தெரிவித்த கருத்து 2015 ஆம் ஆண்டில் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.