1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (13:06 IST)

இலங்கையில் ரஷ்ய பிரதிநிதிகள்: எரிபொருள் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை!

ரஷ்யாவின் எரிபொருள் நிறுவனங்கள் இரண்டை பிரதிநிதித்துவப்படுத்தி, இரண்டு பிரதிநிதிகள் இலங்கையை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.

 
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்கின்றமை குறித்து, ரஷ்ய பிரதிநிதிகள், இலங்கை உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளனர். ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதிநிதிகள் இருவரும் பஹ்ரைன் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளனர்.
 
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள் தட்டுப்பாடு மிக தீவிரமடைந்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
 
ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர் வரிசைகளில் பெருந்திரளானோர் நாளாந்தம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதையடுத்து, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசாங்கம், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாகவே ரஷ்ய அதிகாரிகள் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.