ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (14:43 IST)

இலங்கையில் அலுவலக நேர ரயில்கள் மட்டுமே இயங்கும்!

இலங்கையில் இன்று அலுவலக நேர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 
இதன்படி, அலுவலக ரயில் சேவைகளில், இன்றைய தினம், 25 ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, ரயில் பணியாளர்கள் உரிய முறையில் பணிக்கு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்படி, தமக்கு எரிபொருளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு ரயில் பணியாளர்கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
இந்த நிலையில், ரயில் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால், பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிபுறக்கணிப்பையும் மேற்கொண்டிருந்தனர். இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, பொது பஸ் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.இதையடுத்து, பயணிகள், தமது போக்குவரத்து தேவையை நிறைவு செய்துக்கொள்வதற்காக ரயில் சேவைகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர்.
 
எனினும், ரயில் பணியாளர்களுக்கு சேவைக்கு வருகைத் தர எரிபொருள் இல்லாமை காரணமாக, ரயில் சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய தினம் குறைந்த அளவிலான ரயில் சேவைகளே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் 1000திற்கும் குறைவான தனியார் பஸ்களே இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அரச பஸ்களும் குறிப்பிடத்தக்களவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.