ரேடியோ டவர் மீது மோதிய ஹெலிகாப்டர்.. வெடித்து சிதறியதால் 4 பேர் பலி..!
அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதி ஏற்பட்ட விபத்தால், ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாகவும், இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த குழந்தை உள்பட நான்கு பேர் பலியானதாகவும் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ரேடியோ டவர் மீது தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாகவும், இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலியானதாகவும் அந்நகரின் மேயர் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இது ஒரு சோகமான நிகழ்வு; இந்த சோகமான நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஹெலிகாப்டர் மோதிய இடத்தில் இருந்த குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva