காசா மக்களை பட்டினி போட்டு கொலை செய்யும் வகையில் இஸ்ரேல் திட்டம் தீட்டி வந்த நிலையில் அதற்கு அமெரிக்கா ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசா மீது போரைத் தொடங்கியது. இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டு தாண்டிவிட்ட நிலையில் இதுவரை 41 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என அறிவித்துள்ள இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் காசாவில் உள்ள மக்கள் 10 நாட்களுக்குள் காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அப்படி வெளியேறாதவர்கள் ஹமாஸ் அமைப்பினராகவே கருதப்படுவார்கள் என்றும், 10 நாட்களுக்கு பின் காசாவிற்குள் உணவு, தண்ணீர், மருந்துகள் என எதுவும் அனுப்பப்படாமல் தடை செய்யப்படும் என்றும் ஒரு முடிவை இஸ்ரேல் அமல்படுத்த திட்டமிட்டது.
இதனால் காசாவில் உள்ள மக்கள் பலர் பட்டினி கிடந்து சாக வேண்டிய அவலம் ஏற்படும் என பல நாடுகள் இந்த செய்கையை கண்டித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலின் இந்த திட்டத்தை அதற்கு ஆயுத உதவி செய்து வரும் அமெரிக்காவே கண்டித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த செயல் குறித்து எச்சரிக்கும் விதத்தில் பேசிய அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் “காசாவிற்குள் சில மனிதாபிமான உதவிகள் சென்றடைந்தாலும் அவை போதுமானதாக இல்லை. நாங்கள் விரைவான மாற்றத்தை காண விரும்புகிறோம். காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க நேரிடும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K