வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:14 IST)

இறந்தே பிறந்த குழந்தை! திடீரென உயிர்பெற்ற அதிசயம்! – பிரிட்டனில் ஆச்சர்யம்

பிரிட்டனில் இறந்து பிறந்த குழந்தை ஒன்று அரை மணி நேரத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்தவர் அலெக்ஸ் கெல்லி. நிறைமாத கர்ப்பிணியான இவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையில் அவரது குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி இருப்பதாகவும், அதனால் குழந்தை பிறப்பதில் பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிய வந்தது.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் நார்த்தெம்ப்ரியா சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பல டாக்டர்களின் கூட்டு முயற்சியால் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை உயிரோடு இல்லை. குழந்தை மூச்சுவிடவோ, அழவோ இல்லை. மருத்துவர்கள் உடனடியாக குழந்தைக்கு பல்வேறு மருத்துவத்தையும் சோதித்து பார்த்தார்கள். ஆனால் பலனில்லை. உறவினர்களுக்கு குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

அப்போதுதான் அதிசயம் நடந்தது. கிட்டதட்ட பிறந்து அரைமணி நேரமாக மூச்சற்று இருந்த குழந்தை திடீரென வீறிட்டு அழ தொடங்கியது. இதை கண்ட மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்தனர். குழந்தையின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. உடனடியாக மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு இன்குபெட்டரில் வைக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது. அந்த அழகான பெண் குழந்தைக்கு ஈவா என்று பெயரிட்டிருக்கின்றனர்.

இறந்தநிலையில் பிறந்த குழந்தை திடீரென உயிர்பெற்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.