உலகின் விலை உயர்ந்த காரை ஹேக் செய்த இளைஞர்கள்: பரிசாக அந்த காரையே தந்த டெஸ்லா!
தற்போதைய டிஜிட்டல் உலகில் மொபைலையோ, கணினியையோ அல்லது இணையத்தையோ கூட பலர் எளிதில் ஹேக் செய்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு விலை உயர்ந்த காரை ஹேக் செய்து அதற்கு பரிசாக அந்த காரையே பெற்றிருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள்.
ஹேக்கிங் என்பதில் இரண்டு வகைகள் உள்ளன. ப்ளாக் ஹேக்கிங் மற்றும் வொயிட் ஹேக்கிங். ப்ளாக் ஹேக்கிங் என்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கே தெரியாமல் அவர்களது சர்வருக்குள் புகுந்து அவர்களது தகவல்களை திருடுவது. இது சட்டப்படி குற்றமாகும். சிக்கினால் சிறைதண்டனைதான்.
ஆனால் வொயிட் ஹேக்கிங் என்பது அப்படியானது அல்ல. சில நிறுவனங்கள் தங்கள் சர்வர் மற்றும் இணையத்தில் உள்ள கோளாறுகளை கண்டுபிடிக்க அவர்களே போட்டிகள் நடத்துவார்கள். அதில் கலந்து கொண்டு அவர்கள் அனுமதியோடு ஹேக் செய்து அதில் என்ன கோளாறு இருக்கிறது, எதனால் அதை ஹேக் செய்ய முடிகிறது என்பதை கண்டுபிடித்து சொன்னால் கணிசமான தொகையை சன்மானமாக தருவார்கள்.
சமீபத்தில் பிரபல கார் நிறுவனமான டெஸ்லா புதிய மாடல் கார் ஒன்றை தயாரித்திருக்கிறது. இணையத்தின் மூலமாகவே இந்த காரை செயல்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம். அதன் உரிமையாளரை தவிர வேறு யாராவது ஹேக் செய்து அந்த காரை பயன்படுத்த முடியுமா என்பதை கண்டறிய விரும்பியது டெஸ்லா நிறுவனம். உலகளவில் நடைபெறும் ஹேக்கர்ஸ் போட்டி ஒன்றில் அதற்கான விடை கிடைத்தது.
அதில் கலந்துகொண்ட அமட் காமா, ரிச்சர்ட் சூ ஆகிய இளைஞர்கள் அந்த காரை ஹேக் செய்தனர். இதனால் அந்த காரின் செக்யூரிட்டி கண்ட்ரோலில் உள்ள பழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அந்த மாணவர்களை பாராட்டிய டெஸ்லா நிறுவனம் இரண்டரை கோடி ரூபாய் பரிசு தொகையையும், புதிய டெஸ்லா மாடல் கார் ஒன்றையும் பரிசாக அளித்தனர். மேலும் அந்த இளைஞர்கள் அந்த ஹேக்கர்ஸ் போட்டியில் சஃபாரி ப்ரவுசரையும் ஹேக் செய்து அதற்கு பரிசாக 3.8 கோடி ரூபயையும் தட்டி சென்றுள்ளனர்.