புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (14:34 IST)

கொரோனாவை விட கொடிய வைரஸ் வருகிறது! – பகீர் கிளப்பும் சீனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனாவை விட மோசமான தொற்று உருவாகி வருவதாக சீன தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவை விட மூன்று மடங்கு வீரியமுள்ள புதிய வைரஸ் தொற்று மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானிலிருந்து பரவ தொடங்கியுள்ளதாக அங்குள்ள சீன தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. நுரையீரலில் அழற்சியை ஏற்படுத்தி கொரோனாவை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த தொற்றை கஜகஸ்தான் அரசு நிம்மோனியா காய்ச்சல் என்று வகைப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதத்திற்குள்ளாக 1,772 பேர் இந்த நுரையீரல் அழற்சியால் இறந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ள நிலையில், இது கொரோனாவை விட வீரியமிக்கதாக உள்ளதாக கஜகஸ்தான் சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் இன்னும் மீளாத சூழலில் புதிய தொற்று மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.