1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (13:35 IST)

வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்: சீன அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு

சீனாவில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் என்று அமெரிக்கா  குற்றம்சாட்டும் சீன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை நடத்தப்பட்டதாக சீனா மீது குற்றம்சாட்டப்படுகிறது.
 
அமெரிக்காவை மையமாக கொண்டு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிராந்திய தலைவரான சென் குவாங்வோ மற்றும் மூன்று  அதிகாரிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அமெரிக்கா அறிவித்துள்ள தடையுத்தரவு இலக்கு வைத்துள்ளது.
 
அதேவேளையில், ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படவில்லை என சீனா மறுத்து வருகிறது. எந்தவொரு மதமோ இனவாத குழுவோ இலக்கு வைக்கப்படுவதாக கூறப்படுவதையும் சீனா மறுத்தது.
 
அண்மை காலமாக மறுகல்வி முகாம்களில் பல லட்சம் மக்களை சீன அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. தீவிரவாதம் மற்றும்  பிரிவினைவாதத்தை தடுக்க அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
 
இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பலம்பொருந்திய பொலிட்பிரோவை சேர்ந்த சென் தான், அமெரிக்கா அறிவித்துள்ள தடையுத்தரவுகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படவுள்ள மிக உயரிய சீன அதிகாரி ஆவார். சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் கொள்கைகளுக்கு பின்னால் உள்ள முக்கியப்  புள்ளியாக இவர் பார்க்கப்படுகிறார்.
 
ஷின்ஜியாங் மாகாணத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குநரான வாங் மிங்சான், ஷின்ஜியாங் பிராந்தியத்தை சேர்ந்த மூத்த கட்சி உறுப்பினரான  ஜூ ஹாய்லூன் மற்றும் பாதுகாப்புதுறையின் முன்னாள் அதிகாரியான ஹுவோ ஆகியோரும் இந்த புதிய தடையுத்தரவுகளுக்கு இலக்காகியுள்ளனர்.
 
இவர்களுடன் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்வது இனி அங்கு குற்றமாகும். மேலும் இவர்களுக்கு அமெரிக்காவை மையமாக கொண்ட முதலீடுகள், சொத்துக்கள் அனைத்தும் இனி முடக்கப்படும்.
 
ஷின்ஜியாங் மாகாணத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் மீதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த கொடூரமான உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுதுறை செயலர் மைக் பாம்பேயோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
 
''மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து நிற்கவேண்டும்'' என்றும் மைக் பாம்பேயோ முன்னதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாகவும், ஹாங்காங்கில் அண்மையில் சீனா அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டம் தொடர்பாகவும் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றம் இருந்து வருகிறது.