பூகம்பத்திலிருந்து 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு! – துருக்கி அதிபர் தகவல்!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள், வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகின. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் உலக நாடுகள் பலவும் தங்கள் மீட்பு படைகளை அனுப்பி மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் பல பகுதிகளில் தோண்ட தோண்ட பிணங்களாக கிடைத்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இதுவரையிலான நிலவரப்படி துருக்கியில் 31,974 பேரும், சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். இதனிடையே நம்பிக்கை தரும் விதமாக இடிபாடுகளில் இருந்து பல நாட்கள் கழித்தும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
துருக்கியில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி, சிரியா இருநாடுகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு அதிகமான உதவி கிடைப்பதாகவும், தங்களுக்கும் உதவி செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் சிரியா தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K