1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:44 IST)

சுவை மிகுந்த அன்னாசிப்பழ கேசரி செய்ய !!

Pineapple  Kesari
செய்ய தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் - பாதி அளவு நன்கு பழுத்தது
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி பருப்பு - 20
உலர் திராட்சை - 15
ஏலக்காய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
அன்னாசி எசன்ஸ் - 5 சொட்டு
மஞ்சள் கலர் -  தேவையான அளவு
நெய், குங்குமப்பூ - தேவையான அளவு



செய்முறை:

முதலில் அன்னாசியின் தோலை சீவி அதன் நடு பாகத்தை நீக்கி விட்டு சதையை மட்டும் நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். பின்பு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு சுமார் ஒன்றரை மேசைக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும். நெய் சூடானதும், நறுக்கிய முந்திரி பருப்பை போட்டு அது லேசாக வறுபட்டதும் அதில் உலர் திராட்சையையும் போட்டு முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதே பாத்திரத்தில் ரவையை போட்டு அது லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும். ரவை வறுபடுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ரவையில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை குறைத்து வைத்து ரவை நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.

ரவை நன்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து அதை நன்கு ரவையோடு சேருமாறு கலந்து விடவும். பிறகு அதில் அன்னாசி எசன்ஸ்ஸை சுமார் 5 லிருந்து 6 சொட்டு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அடுத்து நாம் சர்க்கரை சேர்த்து ஊறவைத்திருக்கும் அன்னாசியை அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு, நெய் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூவை தூவி அதை நன்கு கலந்து விட்டு அது லேசாக கெட்டியாகும் வரை அதை வேக விடவும். அது லேசாக கெட்டியானதும் அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரத்திற்கு பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான அன்னாசிப்பழ கேசரி தயார்.