24ம் புலிகேசியில் இருந்து வடிவேலு விலகல்?
24ம் புலிகேசி படத்திலிருந்து வடிவேலு விலக முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தை இயக்கி வருகிறார் சிம்புதேவன். இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அஜித்தின் ‘பில்லா 2’ படத்தில் ஹீரோயினாக நடித்த பார்வதி ஓமனகுட்டன், இந்தப் படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.
இந்நிலையில், வடிவேலுவிற்கும், படக்குழுவினருக்கும் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால், வடிவேலுவிற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை எடுக்கலாம் என்ற முடிவிற்கு படக்குழு வந்துவிட்டதாக தெரிகிறது.
ஆனால், வடிவேலு இல்லாத புலிகேசியை சினிமா ரசிகர்கள் ஏற்பார்களா என்பது தெரியவில்லை.