புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு ஒரே நாளில் இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அல்லு அர்ஜுனின் கைது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
ஆனாலும் படம் வெற்றிகரமாக ஓடி 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பல சாதனைகளை உடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தில் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் காவல்துறை அதிகாரி மீது கதாநாயகன் சிறுநீர் கழிக்கும்படியான காட்சி இருந்தது. இந்தக் காட்சி காவல்துறை அதிகாரிகளை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் தேன்மார் மல்லண்ணா புஷ்பா 2 படக்குழுவினர் மீது மெடிப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.