‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், ‘விஜய் 62’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கிரீஷ் கங்காதரன், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்ற, எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.
‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈசிஆரில் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.