திரையரங்குகள் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு தென்னிந்திய திரையுலக பிரதிநிதிகள் அழைக்கப்படாததற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வாய் மூடி மெளனம் காப்பதை தான் வன்மையாக கண்டிப்பதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:
இந்திய அரசு இந்தியாவில் திரையரங்குகளை திறப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் ஒன்றை வருகின்ற செப்டம்பர் 8ஆம் தேதி செவ்வாய் கிழமை மதியம் 12 மணியளவில் நடத்த உள்ளது. இந்திய அரசின், உள்துறை அமைச்சகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவின் கீழ் நடத்தப்படும் இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு
1. செயலாளர் செய்தி ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம்
2. திரு.அஜய் பிஜ்லி பிவிஆர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்
3... திரு,ரத்தன் சஹா கிழக்கு இந்திய மோஷன் பிக்சர்ஸ் சங்கம் மேற்கு வங்காளம்
4. திரு. சாக்ஷி மெஹ்ரா தலைவர் மோஷன் பிக்சர்ஸ் டெல்லி
5. திருஅஷோடோஷ் அகர்வால் உத்திர பிரதேச திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி
6. திரு.வதன் ஷா குஜராத் திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர்
7. திரு,மனுபாய் பட்டேல் குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்
8. திரு.௮க்ஷயி ரதி மகராஷ்டிர திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி
என எட்டு பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அரசால் நடத்தப்பட உள்ள இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு, தென்னிந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநில திரையரங்கு உரிமையாளர்களை அழைக்கப்படவில்லை. 30 திரைப்படங்களை மட்டுமே தயாரிக்கின்ற மேற்கு வங்க திரையரங்கு உரிமையாளர்கள் கூட அழைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரிக்கின்ற தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளையோ அல்லது ஏறக்குறைய 1000 திரைப்படங்களை தயாரிக்கின்ற தென்னிந்திய திரைப்பட சங்க நிர்வாகிகளையோ இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்பது வருத்தப்படக் கூடிய செய்தி ஆகும்.
60 சதவீதத்திற்கு மேல் திரையரங்கங்கள் உள்ள தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்த கூட்டம் எப்படி முழுமை ஆகும்? வடஇந்தியாவுக்கு மட்டுமான கூட்டம் நடத்தப்படுகிறதா? அல்லது மொத்த இந்தியாவுக்குமான கூட்டம் நடத்தப்படுகிறதா? என்பது கேள்வி குறியாக உள்ளது.
ஒட்டுமொத்த தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் புறக்கனிக்கப்பட்டுள்ள இந்த
நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வாய் மூடி மெளனம் காப்பதை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்க நிர்வாகிகள் அழைக்கப்பட்டு, கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இவ்வாறு ஆர்கே செல்வமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.