புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (11:36 IST)

பாக்யராஜ் ராஜினாமா …பாரதிராஜாவும் ஒரு காரணமா?

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தென்னிந்திய திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே பாக்யராஜ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் திடீர் முடிவாக அவரது ராஜினாமா சங்க உறுப்பினர்களால் ஏற்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழம்பிப்போன ரசிகர்கள் பாக்யராஜின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என்று மண்டையை  பிய்த்து கொண்டு அலைந்து வருகின்றனர்.

ஒரு சிலர் சர்கார் சம்மந்தப்பட்ட சில நிறுவனங்கள் சில உறுப்பினர்கள் மூலமாக பாக்யராஜுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாக்யராஜ் தேர்தல் மூலம் தலைவர் ஆகாமல் உறுப்பினர்களின் மூலம் நியமிக்கப்பட்டவர். அதனால்தான் பாக்யராஜ் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் மூலம் வெற்றி பெற்று பதவிக்கு வர வேண்டும் என விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மற்றொரு காரணமாக ஒரு புதியக் காரணம் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் சர்கார் கதை திருட்டு விவகாரத்தை அடுத்து 96 படத்தின் கதை திருட்டு விவகாரம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் புகார் கூறுபவருக்கு ஆதரவாக தனது குருநாதர் பாரதிராஜா செயல்பட்டு வருகிறார். ஆனால் பாக்யராஜோ 96 படக்குழுவினர் பக்கமே நியாயம் இருப்பதாக நினைக்கிராமாம். அதனால் தனது குரு பாரதிராஜாவுக்கு எதிராக செயல்பட வேண்டிய தர்மசங்கட சூழ்நிலைக்கு ஆளாக வேண்டாம் என எண்ணிதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் ஒரு செய்தி உலாவரத் தொடங்கியுள்ளது.

ஆனால் உண்மை என்னவென்று பாக்யராஜுக்கு மட்டும்தான் தெரியும்.  அவர் இன்னும் இரண்டு நாட்களில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாகக் கூறியுள்ளார். அந்த சந்திப்பின் போது ராஜினாமா குறித்த விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.