மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த மடோனா செபாஸ்டியன்
மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறார் மடோனா செபாஸ்டியன்.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் செலீனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பின்னர், கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கவண்’ படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார்.
தற்போது மூன்றாவது முறையாக மறுபடியும் விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டுள்ளார் மடோனா. கோகுல் இயக்கிவரும் இந்தப் படத்தில், வெளிநாட்டில் வசிக்கும் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்க, இன்னொரு ஜோடியாக மடோனா நடிக்கிறார்.
தனுஷ் இயக்கி, நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் தனுஷ் ஜோடியாக, அதாவது சின்ன வயது ரேவதியாக நடித்தவர் மடோனா என்பது குறிப்பிடத்தக்கது.