'உச்சகட்டம்' வித்தியாசமான திகில் படம் - இயக்குனர் நவீன்!
ஒளிப்பதிவாளர் அப்துல் ரஹ்மானிடம் தொடங்கிய இவரின் சினிமா பயணம் தொடர்ந்து 'தினந்தோறும்' நாகராஜ், கே. பாய்ராஜ், ஞானராஜசேரன், சூப்பர்குட் பிலிம்ஸ், பி.சி. ஸ்ரீராம் இறுதியாக இயக்குனர் கே.எஸ். ரவிக்கமாரிடம் நான்கு ஆண்டுகள், 'தசாவதாரம்' கதை விவாதம் வரை இருந்து தொழில் பயின்று, இன்று உச்சகட்டம் எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நவீன் அவர்களிடம் நம் வெப்துனியாவுக்காக சந்தித்தோம். இந்த முதல் பட வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது? இத்தனை இயக்குனர்களிடம் தொழில் கற்ற அனுபவம், அதுமட்டுமல்லாமல் நிறைய விளம்பரப் படங்கள், குறும்படங்கள் 'அரும்பு' என்ற குழந்தை தொழிலாளி பற்றிய குறும்படம் எனக்கு விருதுகளை மட்டுமல்லாமல் நல்ல விசிட்டிங் கார்டாகவும் அமைந்தது. அப்படி இருந்தும் பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப் படம்.
என் குறும்படங்களின் சி.டி.யும் என் பயோடேட்டா பைலும் லோ பட்ஜெட் படத்தை விட அதிக பிரிண்டுகள் எடுத்து நிறைய தயாரிப்பாளர்களுக்கு கொடுத்திருக்கிறேன். அதுல 'தகப்பன்சாமி' தயாரிப்பாளர் கோபால் ஒரு கோடிக்கு மேல் நஷ்டமடைந்தவர். நான் பல கம்பெனி படிகளில் ஏறி இறங்கியவன். இருவருக்குமே தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். ஏற்கனவே வைத்திருந்த தலைப்பு 'ஜீவன்', அது வடமொழிச் சொல் என்பதால் 'உச்சகட்டம்' என்று மாற்றிவிட்டோம். படத்தின் நாயகன், நாயகி மற்றும் நடிக-நடிகைகள்? ஹீரோ, ஹீரோயின்கள் புதுமுகங்கள். கஞ்சா கருப்பு என் ஊர்காரர் (சிவகங்கை) அந்த மண் மனத்தோடு ஒரு கதாபாத்திரமாக நடிக்கிறார். படத்தில் மொத்தம் 12 கேரக்டர்கள்தான். படத்தின் கதை எந்த மாதிரியனாது? எது மாதிரியும் இல்லாத ஒரு திகில் படம். சீனுக்கு சீன் ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணிக்கிட்டே இருக்கும். அடுத்து என்ன நடக்கும்னு யாராலயும் யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
கேமராமேன் ஏற்கனவே படம் பண்ணியவரா? இல்லை அவரும் புதியவர்தானா? கேமராமேன் செந்தில்குமார் எம்.எஸ். பிரபுவின் உதவியாளர். சாய்மீரா புரொடக்சன்ஸ் 'வானம் பார்த்த சீமை' படம் பன்னிட்டு இருக்கார். நானும் அவரும் சேர்ந்து ஆல்பம் ஒன்று பண்ணிருக்கோம். ஒளிப்பதிவாளரை ஒளிப்பதிவாளரா மட்டும் பார்க்கிறதில்லை (16 குறும்படங்கள், 63 விளம்பரங்கள் எடுத்த அனுபவத்தில் சொல்கிறேன்) அதையும் மீறி கதையோட அவங்களோட பார்வை பயணிக்கணும். ஏன்னா ஸ்பாட்ல அவங்கதான் இயக்குனர். கதையை நெஞ்சிலயும், கண்ணுலயும் சுமக்கிற நபர். அந்த வகையில செந்தில்குமாருக்கு தீனி போடுற படமா 'உச்சகட்டம்' இருக்கும். இசையமைப்பாளர் மற்றும் பாடல்கள் குறித்து? இசையமைப்பாளர் விஸ்வஜித். அவருக்கு இது இரண்டாவது படம். டிஸ்கஸன்ல உட்காரும்போது இரண்டே பாட்டுன்னுதான் ஆரம்பிச்சோம். சின்ன RR வரவேண்டியதுக்கு Song போட்டு நாலு பாட்டாச்சு. அப்புறம் மேக்கிங் சாங் ஒன்னுன்னு இப்போ 5 பாட்டாச்சி. என் கதை சூழலுக்கு பொருத்தமாக மிகச்சிறந்த டியூன்களா போட்டிருக்காரு. பழனிபாரதி அண்ணன் ஒரு டூயட் சாங் எழுதியிருக்கிறார். ஆண்டாள் பிரியதர்சினி கணவன்-மனைவிக்கான ஒரு பாடலை எழுதியிருக்காங்க. அடுத்து எம்.ஜி. கன்னியப்பன், காதலிக்காக உருகி எழுதற இந்த காலத்தில் மனைவிக்காக உருகுகிற பாடலை எழுதி கொடுத்திருக்கார். ஜோ. மல்லூரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பாடலை எழுதியிருக்கார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்? எடிட்டர் ஆண்டனியோட உதவியாளர்கள் ரியாஸ்-சாபு இந்த படத்தின் மூலமா எடிட்டராக அறிமுகம் ஆகறாங்க. கலை இயக்குனர் மோகன். இவர் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார் படங்களுக்கு கலை இயக்குனரா இருந்தவர். அதுமட்டுமல்லாமல் 1980ல் வெளியான 'உச்சகட்டம்' படத்திற்கும் இவர்தான் கலை இயக்குனர். அவர் இந்த உச்சகட்டம் படத்திற்கும் வேலை பார்ப்பது ரொம்ப பெருமையான விஷயம். ஸ்டண்ட் மாஸ்டர் 'ஸ்பீட்' சையத், கனல் கண்ணன் மாஸ்டரோட உதவியாளர். ரவிக்குமார் ஸார்கிட்ட 'சரவணா' படம் வேலை செய்யும்போது சையதை ஸ்பீட் சையதுனு கலாட்டா பண்ணுவேன். அதுவே அவருக்கு பேராயிடுச்சி. இந்தப் படத்துல சண்டை காட்சிகள் இல்லைன்னாலும் சில காட்சிகளுக்கு தேவைப்படறதால அவரை மாஸ்டரா அறிமுகப்படுத்தறேன். அப்புறம் கதைக்கு மற்றொரு ஹீரோ ஒரு பங்களா, அப்புறம் செல்ஃபோன் இவையும் முக்கியமா இடம்பெறுது. அதுக்காக பல்வேறு ஊர்களில் பங்களா தேடிட்டு இருக்கோம்.
படத்தின் தயாரிப்பாளர் ஒரு கேரக்டரில் நடிப்பது உண்மையா? ஆமாம், ஒரு திருப்புமுனை கேரக்டர் பன்றார். ஒரு தயாரிப்பாளருக்காக உருவாக்காமல், கதையில இருக்கிற கேரக்டர். அவருக்காக காட்சிகளை அதிகப்படுத்த சொல்லலை. படத்தில் நான்கு காட்சிகளில் மட்டுமே நடிக்கிறார். உங்கள் குரு கே.எஸ். ரவிகுமாரிடம் வாழ்த்து பெற்றீர்களா?
எந்த உதவி இயக்குனருக்கும் இயக்குனர் கொடுக்கும் சம்பளம் பெரிசா படறதில்லை. ஆனா, அந்த உதவி இயக்குனர், இயக்குனராகும் போது நேரில் வந்து வாழ்த்துவது 'நான் இருக்கேண்டா தைரியமா பண்ணு'ன்னு சொல்ற மாதிரி. அந்த யானை பலத்தை கொடுத்தது கே.எஸ். ரவிக்குமார். 'ஜக்குபாய்' கம்போஸிங், டயலாக், தசாவதார பேட்டிகள் மற்றும் விழாக்கள் கேரளா, ஹைதராபாத்துன்னு பறந்துட்டு இருந்தாலும் பூஜைக்கு நேரில் வந்து வாழ்த்திவிட்டுப் போனார். முதல் படமே 'திகில்' படமாக எடுக்கிறீர்களே... என்னங்க பன்றது, 'பொம்மரிலு' மாதிரி அழகான குடும்பக் கதையெல்லாம் வெச்சிருக்கேன். கார்ப்பரேட் கம்பெனிகள் கூட முதல் படம் பன்னிட்டு வாங்கன்னு நம்ம ஹீரோக்கள் மாதிரியே சொல்றாங்க. சரி... நம்மளும் நம்மள Proof பண்ணுற மாதிரி ஒரு படம் பண்ணிட்டு போலாம்னுதான்... ஆனா கண்டிப்பா 'உச்சகட்டம்' தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திகில் படமாகவும்... தொழில்நுட்ப நேர்த்திகளில், நான் கே.எஸ். ரவிக்குமார், பி.சி. ஸ்ரீராம் உதவியாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த உச்சகட்டம் படத்தை வெற்றிப்படமாக்கிக் காட்டுவேன். அதேபோல் என்னோட இணைந்திருக்கிற அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களின் முழு ஒத்துழைப்பும், ஈடுபாடும் மனசுக்கு நிறைவா இருக்கு. அதனால நான் நெனைச்சிருக்கிற அந்த வெற்றியை அடைவேன்.