நியூஸிலாந்தை பழிவாங்கும் எண்ணம் இல்லை – விராட் கோலி பேட்டி!
இன்று இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டி20 தொடங்க இருக்கும் நிலையில் நியூஸிலாந்தை பழிவாங்கும் எண்ணம் இல்லை என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை இந்திய மண்ணில் வீழ்த்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி அடுத்ததாக நியூஸிலாந்து அணியுடன் ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் மோத இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் இந்தியாவை நியூஸிலாந்து வீழ்த்தியது. அதற்கு பிறகு மீண்டும் இந்தியா – நியூஸிலாந்து சந்திக்கும் போட்டி இது என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்கு இந்தியாவிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
உலக கோப்பையில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்ததற்கு இந்தியா பழி வாங்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள விராட் கோலி ”நியூஸிலாந்தை பழிவாங்கும் எண்ணமெல்லாம் இல்லை. அப்படி ஒருவேளை எண்ணம் இருந்தாலும் மென்மையான நியூஸிலாந்து வீரர்களை பார்த்தாலே அந்த எண்ணம் போய்விடும். சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல உதாரணமாக நியூஸிலாந்து அணி இருக்கிறது. கேன் வில்லியம்ஸன் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருக்கிறார். அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்கள் உலக கோப்பையில் வென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என கூறியுள்ளார்.
இந்திய ரசிகர்கள் பலரும் கேன் வில்லியம்ஸனுக்கும் ரசிகர்களாக இருந்தாலும் இந்த தொடரில் இந்தியா வெல்ல வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.