நான் விராட் கோலியை நம்புகிறேன்! - விவியன் ரிச்சர்ட்ஸ்
இந்திய கேப்டன் விராட் கோலி நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றுவார் என முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவன் விவியன் ரிச்சர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. வரும் 26ம் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ள நிலையில், இந்த தொடரை இந்தியா கைப்பற்ற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு வந்திருந்த மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், கோலி தலைமையில் இந்திய அணி தொடரை நிச்சயம் வெல்லும் என கணித்துள்ளார்.
இது குறித்து கொல்கத்தாவில் அவர் பேசியபோது, "இந்த தொடரை வெல்ல இந்தியாவிற்கு நல்ல வாய்ப்புள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், இன்னும் தொடரை கைப்பற்ற முடியும். கடைசி வரை உயிரைக்கொடுத்து விளையாடக்கூடிய விராட் கோலி போன்ற ஒரு கேப்டன் இந்தியாவுக்கு உள்ளார். வெற்றியை நோக்கி தனது வீரர்களை அவர் நிச்சயம் இழுத்துச் செல்வார்" என்று கூறினார்.
மேலும் கூறிய அவர் , "என்னைப் பொருத்தவரை இந்தியா தான் வெல்லும் என நினைக்கிறேன். ஆனால் அதற்காக ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும், மிகவும் பலம் வாய்ந்த அணி அது" என்றும் ரிச்சர்ட்ஸ் எச்சரித்தார்.