ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!
ஆஸ்திரேலியா வீரருடன் மோதிய விராட் கோலிக்கு சம்பளத்தில் 20% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசி விதிப்படி, ஒருவரை ஒருவர் உடலால் மோதிக் கொள்ளும் விளையாட்டு கூடாது என்றும், ஆட்டத்தில் உடலை தொடுவதற்கு விதிமுறைகள் இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் எதிரணி வீரரின் உடலை தொடுவது விதிகளை மீறுவதாகும். இந்த விதியை விராட் கோலி மீறியதால், அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், பத்தாவது ஓவர் முடிந்த பிறகு, சாம் கான்ஸ்டால் கிரீஸில் இருந்து அந்த பக்கம் நடந்து செல்லும் போது, விராட் கோலி வேண்டுமென்றே அவரது பக்கம் வந்து தோள்பட்டையால் இடித்தார். பின்னர் இருவரும் ஏதோ பேச, நடுவர் வந்து சமாதானம் செய்து வைத்தார்.
இந்த சம்பவத்தை பலரும் பார்த்து முகம் சுழித்தனர். இதுகுறித்து ரிக்கி பாய்ண்டிங் கூறியபோது, "விராட் கோலி தனது வலப்புறம் நகர்ந்து சாம் கான்ஸ்டால் மீது இடித்துள்ளார். இதை நடுவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள். கோலி இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்," என்று தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது; அதை தாண்டக்கூடாது," என்று கூறியுள்ளார்.
Edited by Mahendran