காரடையான் நோன்பு எதற்காக ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது...?
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் விரதம் இருப்பது காரடையான் நோன்பு ஆகும். மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர்.
இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி விரதம், சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள் நம் பெரியோர்கள். சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் (தாளி பாக்கியம்) நிலைக்கவும்; தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற் காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள்.
விரத பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் வைத்து (கலச பூஜை) வழிபடுவார்கள். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெய்யும் நிவேதனம் செய்வார்கள்.
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். "மாசிக்கயிறு பாசி படியும்' என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது பெண்களுக்கு விசேஷமானதாகக் கருதப்படுகிறது.