1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (11:47 IST)

காரடையான் நோன்பு கடைப்பிடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா....?

காரடையான் நோன்பு  ஒவ்வொரு சுமங்கலி பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.தன் கணவன் நன்றாக வாழவும், என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்விரதத்தை பெண்கள் இருப்பர்.


மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு.  சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.

இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.

இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும்.

முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள். மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம்.

தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும்.