திமுக வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியிடப்படும்..! துரைமுருகன் முக்கிய தகவல்..!
காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தவுடன் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக அரசு கூறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த துரைமுருகன், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெறுவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என்றார்.
எப்போதாவது அவர்கள் நாங்கள் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுகிறோம் என்று கூறியிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என குறிப்பிட்ட துரைமுருகன், ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று ஆணை பெற்று தண்ணீரை பெறுகிறோம் என விளக்கம் அளித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுகவினர் அன்று எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டம் இன்று அமலுக்கே வந்திருக்காது என்றும் கூறினார்.
வேட்பாளர்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், காங்கிரஸ் தொகுதி பட்டியல் இன்னும் முடியவில்லை என்றும் முடிந்தவுடன் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.