1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 1 மே 2024 (15:59 IST)

மேகதாது விவகாரதில் என்ன செய்கிறார் துரைமுருகன்.? திருமதி பிரேமலதா கேள்வி..!

Premalatha
தன்னை மூத்த அமைச்சர் என சொல்லி கொள்ளும் துரைமுருகன் மேகதாது விவகாரதில் என்ன நிர்வாகம் செய்கிறார்  என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்து, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்க வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த முறை வாக்கு சதவீதம் அறிவிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்றார்.  கடைசியில் 69 சதவீதம் வரை வாக்குபதிவு என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது ஏன் இவ்வளவு குளறுபடி என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று பிரேமலதா கூறினார்.
 
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 20 நிமிடத்திற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் இவை கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். எனவே தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்புகளை பலப்படுத்தி  எந்தவித குளறுபடியும் இல்லாத வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

ஜூன் ஜூலை மாதங்களில் கேப்டன் நினைவிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் திருமதி. பிரேமலதா தெரிவித்தார். காவிரியில்   கோடைகாலம் வந்ததும் தண்ணீர் இல்லை என்பதும் தமிழக பெண்கள் தண்ணீர் இல்லை என குடங்களை கொண்டு வந்து சாலையில் அமர்ந்து போராடுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
 
ஒருபக்கப் மழைநீரை கடவுள் தருகிறார் ஆனால் அவற்றை முறையாக சேமிக்கும் திறனற்ற அரசாக  தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தக் கோடை காலத்தில் அனைத்து நீர் நிலையங்களையும் தூர்வாரி ஜூன் ஜூலைகளில் பெய்யும் மழை நீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
எம்ஜிஆர் எப்படி காவிரியில் இருந்து தண்ணீர் பெற்று கொடுத்தாரோ அதே போல்  திமுக அரசும் கூட்டணி கட்சியிடம் பேசி தண்ணீரை பெற்று தரலாமே? என்று தெரிவித்த பிரேமலதா,  தன்னை மூத்த அமைச்சர் என சொல்லி கொள்ளும் துரைமுருகன் மேகதாது விவகாரதில் என்ன நிர்வாகம் செய்கிறார் என்று கேள்வி எழுப்பினார். திமுக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும் கோடை காலத்திற்கு திமுக அரசு எவ்வாறு தயாராக உள்ளது என முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

 
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், இவற்றை சரி செய்ய வேண்டிய முதலமைச்சர் கொடைக்கானலில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று திருமதி.பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.