பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு!
மாமல்லபுரத்தில் டபிள்யூ.வி. கனெக்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நிறைவு பெற்றது.
மாமல்லபுரத்தை ஆடம்பர திருமணங்களுக்கான சுற்றுலாத்தலமாக பிரபலப்படுத்தும் நோக்கில் தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட திருமண தொழில் ஏற்பட்டாளர்கள், பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டன. குறிப்பாக ராச்னோவுத்சவ் ஈவெண்ட்ஸ் நிறுவனர் ராக்கி கங்காரியா, ஜி.ஆர்.டி. ஹொட்டல்ஸ் குழும தலைமை செயல் அதிகாரி விக்ரம் கோட்டா, டபிள்யூ.வி. கனெக்ட் தலைவர் ரிதுராஜ் கன்னா, தலைமை செயல் அதிகாரி தட்சிணா மூர்த்தி, இயக்குனர் விஜய் நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் இசைக்கச்சேரி, கண்கவர் நடன நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ, 18 மணிநேர பயிற்சி வகுப்புகள், கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக 101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு தாலி, வீட்டு உபயோக பொருட்கள், சீர்வரிசைகளுடன் ஒரு கோடி அளவில் திருமணம் இலவசமாக நடத்தி வைக்கப்பட்டு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
மேலும் தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள், ஆடை வடிவமைப்பாளர், அரங்க வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகளையும் வழங்கி டபிள்யூ.வி. கனெக்ட் நிறுவனம் கௌரவப்படுத்தியது.
இந்த ஆண்டு மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தியது போல் அடுத்த ஆண்டிற்கான தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு ஜெய்பூரில் நடைபெற உள்ளதாக டபிள்யூ.வி. கனெக்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தட்சிணா மூர்த்தி மற்றும் இயக்குனர் நந்தினி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.