ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (17:34 IST)

அமைச்சர் பதவியை பறித்தால்? - முதல்வரை எச்சரித்த விஜயபாஸ்கர்?

குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியதை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

 
குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ ரெய்டு நடத்தியது.  இன்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 
 
இதுபற்றி அறிக்கை வெளியிட்ட விஜயபாஸ்கர் “இது அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக கோர்க்கப்பட்ட வழக்கு. மடியில் கனம் இல்லை. எனவே எனக்கு பயம் இல்லை. சூழ்ச்சிகளை சட்டத்தின் மூலம் எதிர்கொண்டு மீண்டு வருவேன்” என கூறியிருந்தார்.
 
இந்த விவகாரம் அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிஜிபி ராஜேந்திரன், சுகாதரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.

 
சோதனையின் முடிவில், சென்னையில் ஏ.வி.மாதவராவ், உமாசஙகர் குப்தா, மத்திய கலால் துறை பாண்டியன்,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை தற்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று காலை குட்கா ஊழலில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேஷ், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில், கைது செய்யப்பட்ட குடோன் உரிமையாளர் மாதவராவ் அப்ரூவராக மாறியுள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் எனவும் செய்திகள் வெளியானது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டிஜிபி ராஜேந்திரன் மற்றும் விஜயபாஸ்கர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, விஜய்பாஸ்கரின் ராஜினாமா பற்றி முதல்வர் ஆலோசித்துள்ளார். ஆனால்,  நான் பதவி விலக விரும்பவில்லை. பல சோதனைகளை கடந்து விட்டேன். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். அதையும் மீறி என்னை பதவியிலிருந்து நீக்கினால் இன்னொரு டிடிவி தினகரனாக நான் மாறுவேன் என எச்சரிக்கும் வகையில் விஜயபாஸ்கர் பேசியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.