செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (11:38 IST)

மதச்சார்பற்ற அரசுக்கு சிதம்பரம் கோவிலில் என்ன வேலை? வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள மதச்சார்பின்மை அரசுக்கு இந்து கோவில்கள் மீது மட்டும் எப்போதும் வெறுப்புணர்வு உண்டு என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக, இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் தேவையில்லாத ஒரு பிரச்னையை ஏற்படுத்தி, ஸ்ரீநடராஜர் ஆலயத்தை, மதச்சார்பற்ற அரசு எடுத்துக் கொண்டது. உச்ச நீதிமன்றம் வரை போராடி, தீட்சிதர்கள் தங்களது உரிமையை மீட்டெடுத்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீநடராஜர் கோவிலை கைப்பற்ற, இறை நம்பிக்கையற்ற திமுக அரசு, அறத்திற்கு புறம்பான வழிகளில் முயற்சிகளை செய்து வருகிறது.
 
சிதம்பரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. தங்கள் நிர்வாகத்தில் இல்லாத கோவிலில் ஆய்வு நடத்த குழுவை அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்? ஸ்ரீநடராஜர் கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடையில்லை. ஆனால், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது சிவ பக்தர்களின் மனதை, இந்துக்களின் மனதை, புண்படுத்தும் செயல்" என தெரிவித்தார்.