1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:46 IST)

முடிவடையாத தாம்பரம் பணிமனை பணிகள்! - மேலும் சில நாட்களுக்கு ரயில்கள் ரத்து, சேவை மாற்றம்!

தாம்பரம் பணிமனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இன்னும் முடியாததால் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சில நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்டு 14ம் தேதி வரை ரயில்சேவைகளில் பகுதியாக ரத்து மற்றும் சேவை மாற்ற அறிவிப்புகளை தெற்கு ரயில்வே வெளியிட்டிருந்தது. தற்போது பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால் பணிகளை முடிக்க கால அவகாசம் ஆகஸ்டு 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

ஆகஸ்டு 16ம் தேதி காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு மதியம் 1.50க்கு சென்னை வரும் வந்தே பாரத் (20666) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

 

15 மற்றும் 16ம் தேதிகளில் செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் பொதிகை சூப்பர் பாஸ்ட் வண்டி (12662) செங்கல்பட்டு வரை மட்டும் இயங்கும்

 

மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் - செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி (12661) ஆகஸ்டு 16 மற்றும் 17ம் தேதிகளில் எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டிலிருந்து இரவு 9.40க்கு புறப்படும்.

 

ஆகஸ்டு 15, 16 தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 08.05க்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரயில் (12632) செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.

 

மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரயில் (12631) ஆகஸ்டு 16, 17 தேதிகளில் எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டிலிருந்து 9.10 மணிக்கு புறப்படும்.

 

கன்னியாக்குமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஆகஸ்டு 15ம் தேதி செங்கல்பட்டிலேயே நிறுத்தப்படும். மறுமார்க்கமாக ஆகஸ்டு 16, 17 தேதிகளில் எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டிலிருந்தே மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

 

கன்னியாக்குமரியிலிருந்து டெல்லி ஹசரத் நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12641) ஆகஸ்டு 14ம் தேதி அன்று விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்.

 

ஹவுராவில் இருந்து திருச்சி வரும் சூப்பர் பாஸ்ட் ரயில் (12663) ஆகஸ்டு 15ம் தேதி அன்று பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

 

சென்னை எழும்பூர் - காரைக்கால் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ஆகஸ்டு 17 வரை இரவு 9 மணிக்கு பதிலாக 10.25 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்படும்.

 

Edit by Prasanth.K