திமுக பக்கம் தாவும் நிர்வாகிகள்; அப்பக்கமே சாயும் தினகரன்: அமமுக என்னவாகும்?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார். சென்னை வந்த கையோடு அடுத்த அரசு முறை வெளிநாட்டு பயணம் பற்றிய தகவலையும் வெளியிட்டார்.
இந்நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் விளக்கமளித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலினுக்கு வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கையுடன் கூடவே வெள்ளரிக்காயையும் சேர்த்து தருகிறோம் என கேலியாக பதிலளித்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டுமின்றி, வெள்ளை மனசுக்காரருக்கு வெள்ளையறிக்கை தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கமெண்ட் அடித்திருந்தார்.
இதனிடையே குறுக்கிட்ட டிடிவி தினகரன், வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனதுடன்தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றன என கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் இப்படி ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அமமுகவில் இருந்த முக்கிய புள்ளிகளான செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சில நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.
இப்படி சொந்த கட்சிகாரர்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும் போது, கட்சிகாரர்கள் செல்லும் அந்த கட்சிக்கு ஆதரவாக தினகரன் பேசியிருப்பதும் மறைமுக விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது.