தொப்பி போயி.. இரட்டை இலை போயி.. இப்போ குக்கர் சின்னமும்?
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது.
ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் கட்சி பெயர் மற்றும் சின்னத்திற்கு தினகரன் மற்றும் ஓபிஎஸ்-எடப்பாடி அணி இரண்டும் போட்டி போட்டது. எதிர்பார்த்தது போல், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கே அதை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன்.
இது ஒருபுறம் இருக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை கேட்டு தேர்தல் கமிஷனை அனுகினார் தினகரன். ஆனால், குக்கர் சின்னம்தான் அவருக்கு கிடைத்தது. அந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தினகரன். தற்போதைக்கு, அதிமுகவின் மற்றொரு அணியாகவே செயல்படும் தினகரன், மக்கள் மத்தியில் பிரபலமான குக்கர் சின்னத்தை உள்ளாட்சி தேர்தலிலும் பெற வேண்டும் என நினைக்கிறார்.
எனவே, 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பிக்கள் கொண்ட தனது அணிக்காகவும், வரும் உள்ளாட்சி மற்றும் மற்ற தேர்தலில் போட்டியிடவும், தங்கள் அணிக்கு எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் என்ற மூன்று பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் கோரிக்கை வைத்தார்.
ஆனால், தினகரன் கேட்கும் சின்னத்தையோ, கட்சி பெயரையோ கொடுக்கக் கூடாது என எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஒருபுறம், தற்போது தேர்தல் எதுவும் நடைபெறவில்லை என்பதால், தினகரன் அணிக்கு சின்னம் வழங்குவதில் அவசரம் காட்ட அவசியமில்லை என தேர்தல் ஆணையமும் கூறிவிட்டது.
இதனால், தினகரனுக்கு அவர் கேட்கும் கட்சி பெயர்களும், குக்கர் சின்னமும் கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.