பொங்கல் வரைதான் இந்த ஆட்சி ; டிடிவி தினகரன் ஜோதிடம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி வருகிற பொங்கல் வரைதான் நீடிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவருக்கு வழங்கிய தங்க கவசத்தை யார் பெறுவது என்கிற போட்டி நேற்று மதுரையில் ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் அணிக்கு ஏற்பட்டது. துணை முதல்வர் ஓ.பி.எஸ் சில மணி நேரங்கள் காத்திருந்தும், அந்த கவசம் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தினகரன் “கட்சியின் பொருளாலரே கவசத்தை பெறுவார் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தனிப்பட்ட முறையில் ஓ.பி.எஸ் பெறுவார் எனக் கூறவில்லை. யார் பொருளாலர் என்பதிலேயே சிக்கல் நீடிக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு வழங்கக் கூடாது என தெரிவித்திருந்தோம். இதை ஓ.பி.எஸ் தவறாக புரிந்துகொண்டு நாங்கள் பிரச்சனை செய்வதாகக கூறுகிறார்.
இரட்டை இலையை முடக்கியது அவர்தான் என தொண்டர்களுக்கு தெரியும். அவர் கேவலாமான அரசியல் செய்து வருகிறார். அடுத்த தேவர் ஜெயந்தியன்று எங்கள் பொருளாலர் கவசத்தை பெறுவார். வருகிற பொங்கலுக்குள் பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்ந்து விடும்” என அவர் பேட்டியளித்தார்.