திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (14:04 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் ; தினகரனின் மாஸ்டர் பிளான் ; ஒதுங்கிக் கொள்ளுமா திமுக?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளுமாறு திமுகவிடம் தினகரன் அணி கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே, வருகிற டிசம்பருக்குள் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்த தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதிமுக இன்னும் தங்கள் பக்கமே இருப்பதாக காட்டிக் கொள்ளலாம் என்பதால் இது தினகரனுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், திமுகவும் இதில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறி தினகரன் தோல்வி அடைய வாய்ப்பிருப்பதால், தேர்தலை புறக்கணிக்கும்படி தினகரன் அணி திமுகவிடம் கெஞ்சி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
திமுக இதில் போட்டியிட்டு ஒருவேளை தோல்வியை தழுவினால், அடுத்து வரும் லோக்சபா தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும். அதே நேரம் தேர்தலை புறக்கணித்தால் அதிமுக- தினகரன் இடையே நேரடி போட்டி ஏற்படும். ஒருவேளை தினகரன் வெற்றி பெற்றால் அது எடப்பாடி அரசுக்கு தோல்வியாக முடியும். எனவே, தினகரன் தரப்பினரின் கோரிக்கையை ஏற்கலாமா வேண்டாமா என்பது பற்றி திமுக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
அதேநேரம், தினகரனுக்காக நாம் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது. ஆர்.கே.நகர் தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். திமுக வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும். எனவே தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் சில திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனராம். எனவே, இதுபற்றி திமுக இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.