திருச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை! – பிரேத பரிசோதனையில் தகவல்!
திருச்சி அருகே அதவத்தூர் பாளையம் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவரது 14 வயது மகள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதிய வேளையில் வீட்டில் உள்ள குப்பைகளை கொட்ட முள்காட்டிற்கு சென்றுள்ளார் சிறுமி. மாலை நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர்
அப்போது சிறுமி முள்காட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் பலரும் சிறுமியின் இறப்பிற்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. முன் விரோதம் போன்ற காரணங்களால் சிறுமி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.